எதையும் எதிர்கொள்கிற அரசியல் பேராண்மை வேலுவுக்கு இருக்கிறது.. பாஜகவின் பச்சா இங்கு வேலைக்கு ஆகாது.. KS அழகிரி

By vinoth kumarFirst Published Mar 25, 2021, 8:33 PM IST
Highlights

ஜனநாயகப் படுகொலை செய்கிற மத்திய பாஜக அரசையும், அதற்குத் துணை போகிற அதிமுகவுக்கும் தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

ஜனநாயகப் படுகொலை செய்கிற மத்திய பாஜக அரசையும், அதற்குத் துணை போகிற அதிமுகவுக்கும் தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதைச் சகித்துக் கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு, வருமான வரித்துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

வருமான வரி சோதனை என்ற போர்வையில், தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார்.

இன்று காலை விருந்தினர் விடுதியிலிருந்து புறப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளத் தொடங்கிய சிறிது நேரத்தில், எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், எ.வ.வேலுவின் தேர்தல் பணிகளை முடக்கிவிடலாம் என பாஜக திட்டம் தீட்டிச் செயல்படுகிறது. எதையும் எதிர்கொள்கிற அரசியல் பேராண்மை எ.வ.வேலுவுக்கு இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவை பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றைத் தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை முடக்குவதற்குப் பயன்படுத்துவதன் மூலம் தேர்தலில் ஆதாயம் தேடலாம் என்பது வெறும் பகல் கனவாகத் தான் முடியும்.

இந்த முயற்சிகளுக்குப் பின்னால் இருக்கிற ஜனநாயக விரோதச் செயல்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இத்தகைய செயல்கள் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்கிற மத்திய பாஜக அரசையும், அதற்குத் துணை போகிற அதிமுகவுக்கும் தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!