கொங்கு நாடு மூலம் கொல்லைப்புறமாக நுழைய முயற்சியா..? பாஜகவுக்கு சிபிஎம் எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Jul 10, 2021, 8:43 PM IST
Highlights

மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக நுழைய நினைக்கிறது. அதற்கான எதிர்விளைவுகளை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
 

புதுக்கோட்டையில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஏற்கனவே மாநில உரிமைகளில் பலவற்றை மத்திய அரசு பறித்துவிட்டது. இப்போது கூட்டுறவுத் துறை போன்ற துறைகளையும் கைப்பற்றும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. இந்த அணையைக் கட்ட அப்பகுதி பழங்குடியின மக்களே எதிர்க்கிறார்கள். எனினும், தேர்தலில் மக்களிடம் வாக்குகள் பெறவேண்டும் என்பதற்காக கர்நாடக அரசு பிடிவாதம் காட்டுகிறது.
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் சொல்வது ஆபத்தானது. மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக நுழைய நினைக்கிறது. அதற்கான எதிர்விளைவுகளை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து முறியடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசின் செயல் பாராட்டுக்குரியது. கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வராதவரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்த வேண்டாம்.
காவிரி-குண்டாறு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது புகார்கள் எழுந்தால், அதுபற்றி முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். அதே சமயம், ஆட்சிக்கு வந்த இரு மாதங்களிலேயே எல்லாவற்றையும் எதிர்பார்க்க முடியாது” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

click me!