என்றும் ஒரே நாடுதான்... அது தமிழ்நாடுதான்.. ஒரே வரியில் திருநாவுக்கரசர் சொன்ன பதில்..!

By Asianet TamilFirst Published Jul 10, 2021, 8:31 PM IST
Highlights

சில மாவட்டங்களைப் பிரித்து சிலர் கொங்கு நாடு கேட்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு வாய்ப்பில்லை. என்றும் ஒரே நாடு தமிழ்நாடுதான் என்று திருச்சி எம்.பி.யும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
 

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், “திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு சுமார் 700 ஏக்கர் நிலம் தேவை. இந்த நிலத்தைப் பெற ராணுவம் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுவரை 46 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் கூட்டம் நடத்தி, இப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.

 
திருச்சியை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என எம்ஜிஆர் விரும்பினார். இத்தொகுதியில் நான் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே இதை வலியுறுத்தி வருகிறேன். இதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சில மாவட்டங்களைப் பிரித்து சிலர் கொங்கு நாடு கேட்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு வாய்ப்பில்லை. என்றும் ஒரே நாடு தமிழ்நாடுதான். அதுவும் இந்தியாவுக்குள்தான் இருக்கிறது.
அப்படிப் பார்த்தால், பாமக நிறுவனர் ராமதாஸ் சில மாவட்டங்களைப் பிரித்து தனியாக ஒரு மாநிலம் கேட்கிறார். அவரவர் விருப்பத்துக்கெல்லாம் கேட்டதையெல்லாம் செய்ய முடியாது. தற்போதைய திமுக அரசு சில புதிய மாவட்டங்களை உருவாக்கப் போவதாகத் தகவல்கள் வெளியானது. அந்த அடிப்படையில் புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கியைப் பிரித்து தனி மாவட்டமாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அது நடந்தால், ஊர்க்காரர் என்ற அடிப்படையில் மகிழ்ச்சிதான்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு நான் முயற்சி செய்யவில்லை. ஆனால், கட்சி தலைமை, அப்பதவியை எனக்குக் கொடுத்தால் திறம்படச் செயல்பட நான் தயார். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். திருச்சி கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறுகையில், “திருச்சியை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்று சட்டப்பேரவை கன்னிப்பேச்சில் தெரிவித்தேன். அதை முதல்வர் பரிசீலனை செய்வதாக மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.” என்று தெரிவித்தார்.

click me!