சவால் விட்ட மம்தாவுக்கு சிக்கல்... வேறு ரூட்டில் பாயும் சி.பி.ஐ..!

By Thiraviaraj RMFirst Published May 17, 2021, 5:24 PM IST
Highlights

பணி செய்யவிடாமல் தடையாக இருக்கும் மம்தா மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தலைமைக்கு மேற்கு வங்க CBIஅலுவலகத்தில் இருந்து இ-மெயில் அனுப்பப்பட்டது. 

மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா பத்திரிகை நிறுவனம் 2014ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதன்படி பத்திரிகையாளர் ஒருவர் தன்னை தொழிலதிபர் என அடையாளப்படுத்திக் கொண்டு மாநிலத்தில் தொழில் தொடங்க அனுமதி கேட்டுள்ளார். அனுமதி வழங்குவதற்காக திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 7 பேருக்கு லஞ்சம் அளித்திருக்கிறார். இதனை வீடியோவும் எடுத்துள்ளார்.

இதற்குப் பின் சரியாக 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் இந்த வீடியோவை நாரதா இணையதளம் லீக் செய்தது. நாரதா டேப் ஊழல் என்றழைக்கப்படும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களான அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, எம்எல்ஏ மதன், முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை இன்று விசாரணைக்கு சிபிஐ உத்தரவிட்டிருந்தது. அதன்படி நால்வரும் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றன்னர். திடீரென்று சிபிஐ அதிகாரிகள் நால்வரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

இவ்விவகாரம் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்றார். சுமார் 45 நிமிடங்கள் அங்கிருந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னையும் கைது செய்யுமாறு சவால் விடுத்தார். இதனால் அப்பகுதி பரபரப்பானது. கட்சி தொண்டர்கள் அனைவரும் அந்த இடத்தில் அதிகமாகக் கூட ஆரம்பித்துவிட்டன. மேலும் ஒருசிலர் கல் எறிந்து வன்முறையில் ஈடுபட தொடங்கினர். அதற்குப் பிறகு மம்தாவின் வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் கலைந்து சென்றனர். 

இந்நிலையில், பணி செய்யவிடாமல் தடையாக இருக்கும் மம்தா மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தலைமைக்கு மேற்கு வங்க CBIஅலுவலகத்தில் இருந்து இ-மெயில் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக விரைவில் பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!