முதல்வர் வருகையால் டிராபிக்.. காக்க வைக்கப்பட்ட நீதிபதி... உள்துறை செயலாளரை அழைத்து நீதிமன்றம் கண்டனம்.!

By Asianet TamilFirst Published Oct 1, 2021, 8:19 PM IST
Highlights

முதல்வர், அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

நடிகர் சிவாஜிகணேசனின் 93-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு முதல்வர் வருகை தந்தபோது சாலையில் இரும்பு தடுப்புகளை அமைத்து போலீஸார் நிறுத்தி வைத்தனர். இதனால் அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அந்த சாலை வழியாக வந்த  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனத்தை காவல் துறையினர்  தடுத்தனர்.
இதனால் நீதிமன்றத்துக்கு 25 நிமிடங்கள் தாமதமாக வந்த நீதிபதி, தனது பணி பாதிக்கப்பட்டுள்ளதால் அதுகுறித்து விளக்கம் அளிக்க உள்துறை செயலாளருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடடேஷ் உத்தரவிட்டார். அதன்படி காணொலி காட்சி மூலம் உள் துறை செயலாளர் பிரபாகர் ஆஜரானார். அப்போது அவரிடம், ‘எந்த அடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு’ என்று கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர், இதற்காக சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனையடுத்து முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு செல்லும்போது, இதுபோன்று போலீஸார் தடுத்து நிறுத்துவார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ‘முதல்வர், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை  நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.
 

click me!