முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா... மாநிலங்களவையில் இன்று பலப் பரீட்சை! 

 
Published : Jan 02, 2018, 09:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா... மாநிலங்களவையில் இன்று பலப் பரீட்சை! 

சுருக்கம்

Triple Talaq Bill to be tabled in Rajya Sabha today

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேறிய முத்தலாக்கை  தடை செய்யும் சட்ட மசோதா, இன்று மாநிலங்களவையில் விவாதத்திற்கு வருகிறது. 

இஸ்லாமிய ஆண்கள் மூன்று முறை தலாக் சொல்லி, தங்கள் மனைவியரை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் 2017 ஆக.22ல் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இது குறித்து சட்டம் இயற்றுமாறும், அது வரையில் இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் கூறியது.  உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, முத்தலாக்கை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டியது. இதை அடுத்து, இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு மசோதா உருவாக்கப்பட்டது.

இந்த மசோதா, கடந்த டிச.27ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. காரசார விவாதங்களின் பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதன் பின்னர், இந்த சட்ட மசோதா இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொண்டு வரப் படுகிறது. இதன் மீதான விவாதம் இன்று காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரணம், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக பலம் இல்லாத மாநிலங்களவையில் இது குறித்த விவாதம் கடுமையானதாக இருக்கும் என்று கூறப் படுகிறது. மாநிலங்களவையிலும் இது வெற்றிகரமாக நிறைவேறினால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இது அனுப்பி வைக்கப் பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பின்னர் சட்டமாக அமலுக்கு வரும். 

மக்களவை விவாதத்தின் போது, முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் ஆண்கள் கைது செய்யப் பட்டால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப் படாது, முறையான ஜீவனாம்சம் வழங்கப் பட வேண்டும். அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும், பராமரிப்புக்கு பொறுப்பு ஏற்கவும் மசோதா வழி செய்கிறது. இது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று எத்தகைய கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!