
முஸ்லிம் பெண்களுக்கு புத்தாண்டு அன்பளிப்பாக முத்தலாக் சட்டத்தை வழங்கும் வகையில் அச்சட்டத்தை நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரின் நலனை கருத்தில்கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில், முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். முஸ்லிம் பெண்களுக்கு புத்தாண்டு அன்பளிப்பாக முத்தலாக் சட்டம் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.