
அய்யர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள் எனவே இசையமைப்பாளர் இளையராஜா அய்யர்தான் என்று இயக்குநர் பாரதி ராஜாவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இளையராஜா தனது மூலத்தை மறந்துவிட்டு வேஷம் போடுகிறார் என குற்றம்சாட்டினார்.
தான் எந்த மண்ணில் பிறந்தோம் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது என்றும், பிறந்த மண்ணின் பெருமையைப் பேசுவதே சிறந்தது என்றும் பாராதிராஜா கூறினார்.
மேலும் இளையாராஜா ஐயராக மாற நினைப்பதாகவும், அதனால்தான் ஆங்கில பத்திரிக்கை, அவர் தலித் என்பதால்தான் பத்மவிபூஷன் வழங்கப்பட்டதாக கருத்து வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர், ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாக கூறுவது புரிதல் இன்மையே என குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவர் குறித்து பாராதிராஜா தெரிவித்த இந்த கருத்து தேவையற்றது என்றும் சமீக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் எச்.ராஜாவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.