அரசுப் பேருந்துகளில் சா’தீ’... நரிக்குரவர் குடும்பத்தை உடமைகளோடு வெளியில் தள்ளிய நடத்துனர்... வைரலாகும் வீடியோ

By Ganesh RamachandranFirst Published Dec 10, 2021, 8:27 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ பெண் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் 2 நாட்களுக்கு முன்பாக அதிர்சியை ஏற்படுத்திய நிலையில், நாகர்கோவிலில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தையே பேருந்திலிருந்து இறக்கிவிட்டு அவமதித்துள்ளனர்.

தமிழக அரசுப் பேருந்துகளில் சாதி பாகுபாடு பார்ப்பதா? என்ற கேள்வி தமிழகம் முழுவது பற்றி எரிந்து வருகிறது. காரணம் 2 நாட்களுக்கு முன்பாகத் தான் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில், கருவாடு நாற்றமடிக்கிறது என்ற காரணத்தால் செல்வமேரி என்ற மீனவ பெண் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பான உடன் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் நேரக்காப்பாளர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாகவே நேற்று நாகர்கோவிலில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகர்கோவில் பேருந்து நிலையத்துக்கு வள்ளியூர் பகுதியில் இருந்து தினமும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பலரும் வந்து ஊசிமணி, பாசிமணி போன்ற பொருட்க்ளை விற்று பிழைப்பு தேடுவது வழக்கம். இப்படி நேற்றைய தினம் விற்பனை முடித்து வீடு திரும்ப பேருந்தில் ஏறிய நரிக்குறவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதாகவும், இதனால் அவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் நரிக்குறவர் குடும்பத்தை பேருந்தில் இருந்து வெளியேற்றுவதையும், அவர்களின் உடமைகளை நடத்துனர் தூக்கி வெளியே எரிவதையும் பார்க்க முடிகிறது.

 

கதறி அழும் குழந்தை, நடக்க சிரமப்படும் பெரியவர், ஏன் இறக்கிவிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பும் பெண் என்று அந்த நரிக்குறவர் குடும்பம் பேருந்தில் இருந்து வெளியேற்றப்படும் காட்சி பார்ப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து பேருந்து நிலைய பணியாளர்களிடம் விசாரித்த போது குடித்துவிட்டு தவறான வார்த்தைகளை பேசியதால் சக பயணிகளின் ஆட்சேபத்தின் பேரில் இறக்கிவிட்டோம் என்கின்றனர். ஆனால் இதை ஏற்க மறுத்து பொதுமக்கள் பலரும் பேருந்து ஓட்டுனர், நடத்துனரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கருத்து கூறி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை திமுக மகளிரணி தலைவியும், எம்.பியுமான கனிமொழியும் கண்டித்துள்ளார். சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது என்று அவர் ட்விட்டர் வாயிலாக கண்டித்துள்ளார்.

 

சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. (1/2)

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)

ஒரே வாரத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் என்று இரண்டு இடங்களில் சாதி ரீதியில் பேருந்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!