இப்போ எங்களால் ஒன்றும் செய்ய முடியாது ! கைவிரித்த தொழிற்சங்கங்கள் ...  தொடரும் வேலை நிறுத்தம் !!

First Published Jan 10, 2018, 8:44 PM IST
Highlights
Transport employees strike continues


போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது. ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சட்டசபையில் அறிவித்த நிலையில், 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், வேலை நிறுத்தம் தொடர்பான  வழக்கு  இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது. ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொ.மு.ச வழக்கறிஞர் வாதிட்டார்.



ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சி.ஐ.டி.யு தெரிவித்தது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், 0.13 சதவிகித காரணிதான் பிரச்சனையாக உள்ளது என்பதை நீதிமன்றம் அறிகிறது. இந்த பிரச்சனையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம்.

ஆனால், பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இன்றே இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.



இதனையடுத்து, 2.44 காரணி ஊதியத்தை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்தன.  மேலும், 2.57 காரணி ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தால் நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.

பொதுமக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாத போது தொழிற்சங்களுக்கு ஏன்? என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து, நல்ல முடிவுடன் தொழிலாளர்கள் நாளை பணிக்கு திரும்புவார்கள் என நம்புவதாக கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து, நாளை நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

click me!