
சென்னை போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு பஸ் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொது மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்கும் விதமாக குடும்பத்தினரை தொழிலாளர்கள் களமிறக்க உள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் , வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விளக்க நோட்டீசுகள் அனுப்பப்பட்டு உள்ளதக குறிப்பிட்டார்.
வேலைநிறுத்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? போராட்டம் சட்ட ரீதியாக எவ்வாறு நடத்தப்படுகிறது? என்பதையும், இந்த போராட்டத்துக்கு காரணம் 16 மாதங்களாக ஊதிய உயர்வு கொடுப்பதில் நிர்வாகம் எப்படி கால தாமதம் செய்துவந்தது? அதுமட்டுமல்லாமல் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை நிர்வாகத்துக்காக செலவு செய்தது போன்ற அவலங்களையெல்லாம் முன்வைத்து, இதனை கடந்த 7 ஆண்டுகளாக தொழிலாளர்கள் எப்படி தாங்கி கொண்டிருக்கிறார்கள்? என்பதை தலைமை நீதிபதி முன்பாக தங்களது வழக்கறிர்கள் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.
இனியாவது பொதுமக்கள் நலனுக்காக கவுரவம் பார்க்காமல் தொழிற்சங்கங்களை உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று மாலை அனைத்து போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாகவும் சண்முகம் தெரிவித்தார்.