
ஓரினச் சேர்க்கை என்பது அரசியல் சட்டப்படி குற்றம் ஆகுமா? என்பதை கூடுதல் நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
377-வது சட்டப்பிரிவு
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை (தன் பாலின உறவு) குற்றம் என, இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு கூறுகிறது.
இதை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை, கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
எதிர்த்து மனு தாக்கல்
எனவே, ஓரினச்சேர்க்கை என்பது சட்டப்படி குற்றம் என்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதை எதிர்த்து ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் 5 பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.
கூடுதல் நீதிபதிகள் அமர்வு
அதைத் தொடர்ந்து, ஓரினச் சேர்க்கையை குற்றம் என வரையறை செய்யும் 377-வது சட்டப்பிரிவு அரசியல் சட்டப்படி செல்லதக்கதா என ஆய்வு செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி, தான் ஏற்கனவே பிறப்பித்த ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய உள்ளது. இந்த விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றவும் உத்தரவிடப்படுகிறது.
அப்போது நீதிபதிகள் மேலும் கூறியதாவது-
ஆய்வு செய்யும் தருணம்
‘‘இந்திய அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவு செல்லதக்கதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது. ஒருவருக்கு இயற்கையானதாக இருக்கும் ஒன்று, மற்றொருவருக்கு இயற்கைக்கு மாறானதாக இருக்கும்.
எனினும் சட்டம் என்பது தனி நபர்களுக்காக வளைந்து கொடுக்காது. ஒப்புதலின் அடிப்படையில் நடக்கும் பாலியல் உறவு தனிப்பட்ட உரிமை என்ற மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
அந்தரங்க உரிமையா?
ஆனால், இது தனிநபருக்கான அந்தரங்க உரிமையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தனி நபர் ரகசியங்களை பாதுகாப்பது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, தன்னுடன் பாலியல் உறவு கொள்ளும் நபரை தீர்மானிக்கும் முடிவு ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்ற வாதம் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே முந்தைய உத்தரவு குறித்து இந்த நீதிமன்றம் ஆய்வு செய்ய சூழல் உள்ளது.
மற்ற வகை பாலியல் உறவு
ஓரின சேர்க்கை குற்றம் என்றால் மற்றவகை பாலியல் உறவு குறித்த கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த மனு, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது.’’
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
மேலும் இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.