
சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் குறித்த சிக்கல்கள் ஒருவழியாக விலகி, ‘பத்மாவத்' என்ற பெயரில் ஜனவரி 25-ந்தேதி வெளியாகிறது,
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ராஜபுத்திரர்கள் எதிர்ப்பு
இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
முடங்கியது
இதனால் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதால் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரூ.130 கோடி செலவில் தயாரான படம் முடங்கியது. இந்த நிலையில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிய பின்பு மீண்டும் டெல்லியில் உள்ள தணிக்கை குழுவுக்கு இந்தப் படம் அனுப்பி வைக்கப்பட்டது.
கனவு பாடல் காட்சி
தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்யுமாறு வலியுறுத்தினர். படத்தின் பெயரை மாற்றவும் சிபாரிசு செய்தனர்.
இதையடுத்து ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
பெயரும் மாறியது
படத்தின் பெயரும் ‘பத்மாவதி’க்குப் பதிலாக ‘பத்மாவத்' எனவும் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘பத்மாவத்' படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் யு.ஏ. சான்றிதழ் வழங்கி திரையிட அனுமதி அளித்துள்ளது.
இந்த படம் ஜனவரி 25 ந்தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்துக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சை காட்சிகளால் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கூடுதலாக 60 நாடுகளில்
இதனால் முன்பு திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக 60 நாடுகளில் படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவிலும் கூடுதல் நகரங்களில் ரிலீசாகிறது. இந்தப்பணி முடிந்ததும் உலகம் முழுவதும் ஒரே நாளில் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.