
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குரவத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். மேலும் புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் இன்று 6 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது.
இதனிடையே தற்போது தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு வர அரசு அழைத்துள்ளது. அவர்களுக்காக இன்று வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ்சை பாதியில் நிறுத்திவிட்டு சென்றவர்கள் , பஸ் கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அவர்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது, இனி பேச்சுவார்த்தை கிடையாது. துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொழிலாளர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் நோட்டீஸ் வழங்கப்படும் அல்லது புதிய தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிலை தான் ஏற்படும்.என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.