ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையை திரும்பவும் சட்டப்பேரவையாக மாத்துங்க... எம்.எல்.ஏ.க்களின் அதிரடி கோரிக்கை!

By Asianet Tamil  |  First Published Aug 27, 2021, 8:50 PM IST

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அங்கு மீண்டும் சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
 


சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கடந்த 2010-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் உருவான இந்த சட்டப்பேரவைக் கட்டிடத்தை பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பயன்படுத்தவில்லை. பின்னர் இந்த புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு அரசு மருத்துவமனையாக ஜெயலலிதா அறிவித்தார். தற்போது ஆட்சி மாறி திமுக அரசு பதவியேற்ற நிலையில், கிண்டியில் புதிதாக அரசு மருத்துவமனையை அறிவித்தது. இதனையடுத்து புதிய தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயல்படுவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் இந்தக் கோரிக்கை காங்கிரஸ், மதிமுக எம்.எல்.ஏ.க்களால் வைக்கப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமார் பேசுகையில், “'கொரோனா காரணமாக சட்டப்பேரவையைக்  கலைவாணர் அரங்கில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பார்த்து பார்த்து கட்டிய சட்டப்பேரவை இன்று  மருத்துவமனையாக உள்ளது. அந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு மீண்டும் அங்கு சட்டப்பேரவையை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதேபோல, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் பேசுகையில், "மருத்துவமனையை தென் சென்னைக்கு மாற்றிவிட்டு, மீண்டும் சட்டப்பேரவையை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

click me!