போராளிக்கு ஓர் எடுத்துக்காட்டு டிராபிக் இராமசாமி.. இளம் தலைமுறைக்கு அவர் சொன்னது இதுதான். குமுறும் வைகோ.

By Ezhilarasan BabuFirst Published May 5, 2021, 1:58 PM IST
Highlights

அதனால், தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்தார். மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார், உங்களிடம் நேர்மை இருக்கும்போது, நீங்கள் எதற்காகவும் அஞ்ச வேண்டியது இல்லை என்கின்ற துணிச்சலை, தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்குப் புரிய வைத்து விட்டுச் சென்று இருக்கின்றார். 

போராளிக்கு ஓர் எடுத்துக்காட்டு டிராபிக் இராமசாமி என வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:

தள்ளாத வயதிலும், தளராத போராளியாக வலம் வந்த, டிராபிக் இராமசாமி என்று, பொதுமக்களால் விரும்பி அழைக்கப்பட்ட திரு இராமசாமி அவர்கள், இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். தம்முடைய எளிய வாழ்க்கைச் சூழலிலும், அதிகார வர்க்கத்தோடும், அரசு அதிகாரிகளோடும்ம் துணிந்து போராடினார். சென்னை வாழ் நடுத்தர மக்கள், ஏழை எளியவர்கள், குறிப்பாக நடைபாதைகளில் வாழக்கூடியவர்கள் சந்திக்கின்ற இன்னல்களுக்கு அணை போடுவதாக, அவருடைய பணிகள் அமைந்தன. 

காந்திய நெறிகளைப் பின்பற்றி, அறப்போராட்டங்களில் ஈடுபட்டு, அதற்காகப் பலமுறை தாக்கப்பட்டு, உடல் நலம் குன்றிய நிலையிலும், குன்றாத ஊக்கத்துடன் போராடி, மக்கள் மனங்களை வென்றவர் இராமசாமி. பொதுவாக, நெஞ்ச உறுதியோடு போராடக்கூடிய போராளிகள் எவரும், தங்கள் இலட்சியங்களை விட்டுக் கொடுக்காமல் களத்திலேயே நிற்பார்கள். அவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, முன்னோடியாகத் திகழ்ந்தார். போக்குவரத்து விதிமீறல்களையும், சாலை ஒழுங்குகளையும் மதிக்காமல் நடக்கும் பணக்காரர்களையும், அரசு அதிகாரிகளையும் எதிர்த்து, காந்தியம் வழிகளில் களம் கண்டார். 

அதனால், தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்தார். மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார், உங்களிடம் நேர்மை இருக்கும்போது, நீங்கள் எதற்காகவும் அஞ்ச வேண்டியது இல்லை என்கின்ற துணிச்சலை, தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்குப் புரிய வைத்து விட்டுச் சென்று இருக்கின்றார். அந்த மாமனிதரின் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அவரைப் போன்றவர்கள் இந்த மண்ணில் இருந்து மறைந்தாலும், தங்கள் தொண்டால் என்றென்றும் வாழ்வார்கள்.
 

click me!