ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது..தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு!

By Asianet TamilFirst Published Jun 7, 2020, 9:31 AM IST
Highlights

‘ஜெயலலிதா சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலத்தில்தான் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பி ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறை, அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் வாரிசுகளாக, அவருடைய அண்ணன் மகளான தீபா, மகன் தீபக்கை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் போயஸ் கார்டன் இல்லத்தை ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றவும், முதல்வர் அலுவலகமாகப் பயன்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்தது. 
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல்  செய்துள்ள மனுவில், ‘ஜெயலலிதா சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலத்தில்தான் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பி ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல்.


மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறை, அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடந்துவருகிறது. அந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இப்படி பல விசாரணைகளில் போயஸ் கார்டன் வீடு சம்பந்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்” என மனுவில் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் நாளை (திங்கள் கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

click me!