டி.ஆர். பாலுவுக்கு எவ்வளவு கண்டனங்கள் தெரிவித்தாலும் என்ன தண்டனை கொடுத்தாலும் அவர் திருந்த போவதில்லை ஏனெனில் அவர் இருக்கும் கட்சியின் சித்தாந்தம் அப்படிப்பட்டது.
வன்ம பேச்சுகளை நிறுத்த வேண்டுமெனில் அருந்ததியர் சமுதாயத்தை அவமானப்படுத்திய டி.ஆர்.பாலுவின் எம்.பி. பதவி பறிக்கப்பட வேண்டும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இந்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களை "உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு என்னிடம் பேச, நீ தகுதியில்லாத நபர், நீ தகுதி இல்லாத நபர்" எனத் திரும்பத் திரும்ப சாதீய வன்மத்தில் மத்திய இணை அமைச்சரை அவமானப்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த அருந்ததியர் சமுதாயத்தையே அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீதி தோறும், மேடை தோறும், மூலை முடுக்கெல்லாம் நாங்கள் தான் சமூக ரீதியை கொண்டு வந்தோம், சமத்துவத்தை கொண்டு வந்தோம் என்று தொண்டையும் வாயும் புண்ணாகும் அளவிற்கு அனுதினமும் கத்திக் கொண்டிருக்கும் திமுகவினர் நிஜ வாழ்வில் மிக கொடூர சாதீய வெறி உள்ளவர்கள் என்பது இச்சம்பவத்தில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இதையும் படிங்க: எல்.முருகன் Unfit அமைச்சர்தான்.. திமுகவை ஒரே அறிக்கையில் டோட்டல் டேமேஜ் செய்த இராம ஶ்ரீனிவாசன்..!
இது திமுகவினருக்கு புதிதல்ல ஏற்கனவே திமுக மூத்த தலைவர் ஆர். எஸ். பாரதி அவர்கள் பட்டியலினத்தவர்களுக்கு நாங்கள் போட்ட பிச்சையால்தான் நீதிபதிகளாக வரமுடிந்தது என்றார். ஆ. ராசா அருந்ததியர்கள் வந்தேறிகள் என பேசியதோடு நில்லாது அருந்ததியர் ஓட்டு போட்டு திமுக ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியதன் மூலம் அருந்ததியர்களின் ஓட்டு போடும் உரிமையை கூட தீண்டாமை மனநிலையில் பார்க்கும் தீய குணம் தான் திமுக என்பதையே ஆண்டிமுத்து ராசா பேச்சு காட்டியது.
திமுகவின் மல்டி மீடியா ஏஜென்ட் ஆன தயாநிதி மாறன் நாங்கள் என்ன தாழ்ந்த சாதியா எனக்கேட்டு ஒட்டு மொத்த பட்டியல் இனத்தையும் அவமானப்படுத்தினார். இதுவே திமுக மனநிலை சமூகநீதி. டி.ஆர்.பாலு அவர்களிடம் பேசுவதற்கு கேள்வி கேட்பதற்கு அப்படி என்ன தகுதி வேண்டுமாம். அரசியல் வாரிசாக பிறந்திருக்க வேண்டுமா.? திமுகவினருக்கு வெண்சாமரம் வீச வேண்டுமா.? என்ன ஒரு இழிவான மனநிலை. அருந்ததியர் சமுதாயத்தினர் கொள்ளை அடித்தார்களா.? கலவரத்தை தூண்டினார்களா.? அப்படி என்னதான் செய்தார்கள் இந்தளவிற்கு வன்மத்தை கக்க வேண்டிய அவசியம் என்ன.? இந்த தலைமுறையில் தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தோர் திராவிட சித்தாந்தவாதிகளின் அடக்கு முறையையும் ஒடுக்கு முறையும் தாண்டி உயர் அதிகாரத்திலும், அரசியலிலும் சிறு துளி அளவு உயரத்தை தொட ஆரம்பித்துள்ளனர். இதற்கு இவ்வளவு வன்மமா.?
இதையும் படிங்க: எல்.முருகனை சாதிய ரீதியாக அவமானப்படுத்திட்டாங்க! டி.ஆர் பாலு மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்திடுக-பாஜக
காலமெல்லாம் டி.ஆர்.பாலுவை போன்றவர்களுக்கு சேவகம் செய்து கொண்டே இருக்க வேண்டுமா உயரத்தை தொடவே கூடாதா.? அமைச்சர் முருகன் அவர்கள் தன் உழைப்பு, தன்னலமற்ற சேவையின் மூலம் இந்த உயரத்தை எட்டியுள்ளார் அது பொறுக்கவில்லையா.? டி.ஆர். பாலுவுக்கு எவ்வளவு கண்டனங்கள் தெரிவித்தாலும் என்ன தண்டனை கொடுத்தாலும் அவர் திருந்த போவதில்லை ஏனெனில் அவர் இருக்கும் கட்சியின் சித்தாந்தம் அப்படிப்பட்டது. சாதி பார்த்து பதவி கொடுப்பது, சாதி பார்த்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது, சாதி சண்டையை தூண்டுவது, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் கடைபிடித்த பிரித்தாளும் கொள்கையை இன்றும் தமிழக மக்களிடையே கையாள்வது போன்ற திமுகவின் அடிப்படை சித்தாந்தம் தான் டி.ஆர். பாலு போன்றவர்கள் இப்படி பேசக்காரணம். திமுக ஒரு போதும் சாதிய மனநிலையை மாற்றாது ஆனால் இது போன்ற வன்மப் பேச்சுகளையாவது நிறுத்த வேண்டுமெனில் அருந்ததியர் சமுதாயத்தை அவமானப்படுத்திய டி.ஆர்.பாலுவின் எம்.பி. பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே இனி மேலாவது திமுகவினர் வன்மப் பேச்சுகளை குறைக்க வாய்ப்புண்டு என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.