ஜெயக்குமாரை தொட்டுட்டிங்க.. நாங்க யாருன்னு காட்டுறோம்.. 28 ஆம் தேதி அதகளம் செய்யபோகும் ஓபிஎஸ்-இபிஎஸ்

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2022, 3:39 PM IST
Highlights

அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி சாலையில் கொலைக் குளற்றவாளியைப் போல நடத்தினார், அந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என பின்னர் ஜெயக்குமார் மீது  குற்றச் சாட்டு எழுந்தது பொது மக்கள் பலரும் ஜெயக்குமாரின் நடவடிக்கையை கண்டித்தனர். 

ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்த திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர். நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை தன்னுடைய தொண்டன் எனக் கூறிக்கொண்டு அந்த தொண்டனுக்கு ஒரு இன்னல் என்றால் நானே களம் இறங்குவேன் என ஸ்டாலின் நடந்து கொள்ளவது அவர் பதவிக்கு அழகு அல்ல என ஓபிஎஸ் இபிஎஸ் விமர்சித்துள்ளனர்..

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக  மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் தோல்வியையல்ல படுதோல்வியைச் சந்தித்துள்ளன. இது ஒருபுறமிருக்க வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட் வந்ததாக திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை அதிமுகவினர் சுற்றிவளைத்து பிடித்துடன் பின்னர் அது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகவல் கொடுத்தனர், சம்பவ இடத்துக்கு வந்த அவர் அந்த நபரின் கைகளைக் கட்டி போலீசில் ஒப்படைத்தார். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர்களால் நரேஷ் தாக்கப்பட்டார். கள்ள ஓட்டு போட வந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் ஒருவரை பிடித்து அவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது சட்டத்திற்குப் புறம்பான செயல், தான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதையும் மறந்து ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அந்த நபரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்.

 

அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி சாலையில் கொலைக் குளற்றவாளியைப் போல நடத்தினார், அந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என பின்னர் ஜெயக்குமார் மீது  குற்றச் சாட்டு எழுந்தது பொது மக்கள் பலரும் ஜெயக்குமாரின் நடவடிக்கையை கண்டித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நரேஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜெயக்குமார் கைது விவகாரம் அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து வருகின்றனர். இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்.இபிஎஸ் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை கைது செய்த திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து வரும் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:-  ஒரு குற்றச் செயல் நடக்கிறது என்றால் அதை தட்டிக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில்தான் கள்ள ஓட்டு போட வந்த அந்த நபரை பிடித்தது ஜெயக்குமார் காவல்துறையிடம் ஒப்படைத்தார், அப்போது அந்த நபரிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருக்கலாம் என்பதற்காக அவரை சோதனை செய்து காவல் துறையிடம்  ஒப்படைத்தனர். ஆனால் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்திருப்பது இந்த அரசின் பாசிச மனோபாவத்தை காட்டுகிறது. ஜெயக்குமாரை சிறையில் வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்பதை தெரிந்துகொண்டு கொடூர மனம் படைத்த திமுக அரசு முதல் தகவல் அறிக்கையை மாற்றி பின் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சட்டத்தை சட்டமாக, நீதியை நேர்மையாக சந்திக்க இயலாத திமுக அரசு காவல் துறையை ஏவல் துறையாக்கி எடுத்த பழிவாங்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்மை நிலையை உணராமல் யாரோ சொன்னதைக் கேட்டு மிகப்பெரிய குற்றப்பின்னணி கொண்ட, நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை தனது தொண்டர் என பெருமையுடன் கூறிக்கொண்டு, அந்த தொண்டனுக்கு ஒரு இன்னல் என்றால் நானே களமிறங்குவேன் என கர்ஜிப்பது முதலமைச்சருக்கும், ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல. காரணம் எந்தக் குற்றம் புரிந்தாலும் என் தலைவன் என்னை காப்பாற்றுவான் என்ற எண்ணத்தை திமுகவினருக்கு அதன் தலைவரே அறிவுறுத்துவது போல உள்ளது. நீதியை நிலைநாட்ட சென்ற ஜெயக்குமார் தனி மனித தாக்குதலுக்குட்படுத்தி, சட்ட தாக்குதல் நடத்தி, நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எந்த நீதியும் ஏற்றுக்கொள்ளாது. எனவே திமுகவின் அடக்குமுறையையும், பழிவாங்கும் நடவடிக்கையும் கண்டித்து வரும் திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!