கூட்டமா வந்து ஜெயிக்கிறது வீரமா.? தனியா வந்து தோற்பது வீரமா.? திமுகவை வம்பிழுக்கும் அதிமுக.

By manimegalai aFirst Published Feb 25, 2022, 2:38 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் தனித்துபோட்டியிட தயாரா என அதிமுக, பாஜக சவால் விடுத்துள்ளது.

தேர்தல் வந்தாலே பரபரப்புக்கு கொஞ்சம் கூட குறைவிருக்காது... யார் யாரோடு கூட்டணி வைப்பார்கள்.. எந்த கட்சி தனித்து போட்டியிடும்.. என்ற தகவல்கள் எல்லாம் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும்.. குறிப்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாழ்வா சாவா என்ற யுத்தமே நடக்கும்.. இது தேர்தலுக்கு முந்தைய நிலை மட்டுமல்ல .. தேர்தலுக்கு பின்பும் தான்.. !
எப்படி என்று கேட்கிறீர்களா? தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய தோல்வியை  கொடுத்துள்ளது. அதிமுகவின் இந்தத் தோல்விக்கு பலரும் பல்வேறு  கருத்துகளை கூறி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் எப்போதும் பெரும்பான்மையான வாக்குகள் வாங்கும் என்பது வரலாறு... அந்த வரலாறுக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 43  சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றது. அதிமுக 26 சதவீத வாக்குகளை பெற்றது. இது தேர்தலுக்கு தேர்தல் நடக்கும் ஒரு சம்பவம்.. 

ஆனால் இந்த சம்பவத்தை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நினைத்து ,இந்த தேர்தலோடு அதிமுகவின் கதை முடிந்து விட்டதாக ஆளும்கட்சி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லாததே தோல்விக்கு காரணம் என்றும் வருங்காலத்தில் அதிமுக முழுவதுமாக திமுகவில் சங்கமம் ஆகி விடும் என அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இது போன்ற  விமர்சனங்கள் அதிமுகவினரை சற்று கொதிப்படைய செய்துள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்தே தேர்தலை எதிர் கொண்டது திராவிட முன்னேற்ற கழகம். இந்த கூட்டணி பலத்தால் மட்டுமே திமுக இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும்  ஒவ்வொரு  கட்சிக்கு குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உள்ளது. எனவே அந்த வாக்குகள் தான் ஒன்றிணைந்து திமுகவை 43  சதவீத வாக்குகளைப் பெறும் அளவிற்கு உயர்த்தியதாகவும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்..

அதிமுகவை பொறுத்தவரை தேர்தலை தனித்து எதிர்கொண்டதாகவும், தன்னுடன் சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணியாக இருந்த பாமகவும், பாஜகவும் விலகி சென்ற பிறகும்  தேர்தலை தனித்து எதிர் கொண்டதாக தெரிவிக்கின்றனர். அதிமுகவிற்கு தற்போது ஏற்பட்டுள்ள தோல்வி மிகப்பெரிய தோல்வி என்றாலும் இதை விட மோசமான தோல்வியை பலமுறை அதிமுக எதிர்கொண்டுள்ளதாகவும், அதிலிருந்து மீண்டு பீனிக்ஸ் பறவை போல்  எழுந்து வந்துள்ளதாகவும்  அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
யார் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி ? என்று காங்கிரசும் பாஜகவும் மோதிக்கொண்டு வருகின்றன.
தேர்தலில் ஒரு பைசா கூட கொடுக்காமல் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறிவரும் காங்கிரஸ் கட்சியினரோ, பாஜக தேர்தலில்  பணத்தை வாரி இறைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சிகளின் உதவியால் மட்டுமே காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்றதாகவும் துணிவிருந்தால் தங்களைப் போல தனியாக களம் காண முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார்.   காங்கிரஸ் கட்சிக்கு  வாக்காளர்கள் கிடைப்பார்களா என்பதைவிட வேட்பாளர்கள் கிடைப்பார்களா என்பதுதான் மிகப்பெரிய சவாலாக  இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.  

13 பேர் சேர்ந்து கொண்டு ஒருத்தனை அடிப்பதை வீரமாக பேசுவதா? அல்லது தனித்து நின்று  கூட்டத்தை எதிர்கொண்டவனை வீரனாக கருதுவதா? இந்த கருத்துகளை புரிந்து கொண்டால் தேர்தல் வெற்றி தோல்விக்கு பதில் கிடைத்து விடும்.
எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போது உள்ள கூட்டணிகளில் நிலை மாறுமா? அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

click me!