தேர்தல் நன்கொடையில் டாப்.. பாஜகவுக்கு அள்ளிக்கொடுத்த அறக்கட்டளை.. எதிர்க்கட்சிகளுக்கு கிள்ளிக் கொடுத்தது.!

By Asianet TamilFirst Published Dec 2, 2021, 9:11 AM IST
Highlights

கடந்த 2019-2020-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த அறக்கட்டளை ரூ.31 கோடியை நன்கொடையாக வழங்கியிருந்தது. ஆனால் தற்போது அது ரூ.2 கோடியாகக் குறைந்துவிட்டது.

2020-21-ஆம் நிதியாண்டில் தேர்தல் நன்கொடையாக பாஜகவுக்கு  ரூ.209 கோடியை புரூடன்ட் அறக்கட்டளை வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ரூ.2 கோடியை மட்டும் வழங்கியுள்ளது.

பெரும் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்குவது வழக்கம். அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாகத் தர வேண்டும். அதன் அடிப்படையில் கட்சிகள் கொடுத்த தகவல்களை வைத்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிடும். இதன்படி 2020-21-ஆம் ஆண்டில் புருடன்ட் என்ற அறக்கட்டளை கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி புருடன்ட் அறக்கட்டளை 2020-21-ம் நிதியாண்டில் பல்வேறு கட்சிகளுக்கு ரூ.245.7 கோடியை தேர்தல் நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதில் மிக அதிகபட்சமாக மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு மட்டும் 85 சதவீத நிதியை அந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது. அதாவது, ரூ.209 கோடியை பாஜகவுக்கு மட்டும் வழங்கி உள்ளது. இதே அறக்கட்டளை முன்னாள் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு வெறும் 2 கோடி ரூபாயை மட்டும் நன்கொடையாக வழங்கியுள்ளது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த அறக்கட்டளை ரூ.31 கோடியை நன்கொடையாக வழங்கியிருந்தது. ஆனால் தற்போது அது ரூ.2 கோடியாகக் குறைந்துவிட்டது.

 இதேபோல பீகாரில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு ரூ.25 கோடியை புரூடன்ட் வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.5 கோடி, பீகாரைச் சேர்ந்த ஆர்ஜேடி கட்சிக்கு ரூ.5 கோடி,  டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.1.7 கோடி, பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சிக்கு ரூ.1 கோடி என தேர்தல் நன்கொடைகளை புரூடன்ட் அறக்கட்டளை வாரி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டுமல்ல, 2019-20-ல் தேர்தல் நன்கொடையாக பல்வேறு கட்சிகளுக்கு புரூடன்ட் ரூ.271.5 கோடியை வழங்கியுள்ளது.

அப்போது பாஜகவுக்கு ரூ.217.5 கோடி, காங்கிரஸுக்கு ரூ.31 கோடி, ஆம் ஆத்மிக்கு ரூ.11.26 கோடி, சிவசேனாவுக்கு ரூ.5 கோடி, சமாஜ்வாதி கட்சிக்கு ரூ.2 கோடி, எல்ஜேபிக்கு ரூ.2 கோடி, ஐஎன்எல்டி கட்சிக்கு ரூ.1 கோடி என புரூடன்ட் அறக்கட்டளை வழங்கியுள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் ஜெய்பாரத் தேர்தல் அறக்கட்டளை பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ரூ.2 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

 

click me!