இந்த ஒரு முறை பொறுத்துக்கங்க.. இனிமே இந்த தப்பு செய்யமாட்டேன்.. மண்டியிட்ட கே.என் நேரு..

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2021, 6:13 PM IST
Highlights

இது குறித்து கண்டித்து அறிக்கை வெளியிட்ட மதுரை கம்யூனிஸ்ட் கட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது. எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும் என எச்சரித்தது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்களை தான் ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தம் படுத்திருந்தால் பொறுத்தருள வேண்டும் என திமுக அமைச்சர் கே. என் நேரு வருத்தம் தெரிவித்துள்ளார். இனிமேல் இவ்வாறு நிகழாது என்றும் அவர் கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை என்றும், இது கண்டனத்துக்குரியது என்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அமைச்சர் நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு மன்னிப்பு கேட்டுள்ளார்.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் மிகப்பெரிய  பிரச்சார உத்தியை பயன்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. ஸ்டாலின் அரியணை ஏறியது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விவகாரத்தில் போதிய வேகம் காட்டவில்லை என்ற விமர்சனம் அரசு மீது இருந்து வருகிறது. ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற திமுக வந்து 7 மாநங்கள் ஆகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம், அராஜகம், கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்தாடும், ஆட்சியாளர்கள் அதிகாரிகளை மதிக்கமாட்டார்கள், அதிகாரிகள் மக்களை மதிக்கமாட்டார்கள் எதேச்சதிகாரமாக நடந்து கொள்வார்கள் என்ற விமர்சனமும் திமுக மீதும் அதன் நிர்வாகிகள் மீது இருந்து வந்தது. 

ஆனால் அதிலிருந்து ஸ்டாலின் அரசு முற்றிலும் மாறுபட்டிருப்பதை அவரின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த விமர்சனங்கள் உண்மைதான் என்பதை மெய்ப்பிக்கும்  வகையில் சில திமுகவினரின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது. அந்த வரிசையில் அமைச்சர் கே.என் நேரு கூட்டணி கட்சி எம்.பியை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கே தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை குறிப்பிட்டு, இந்த கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள், வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான் அந்த ஆள் கிட்ட கேளு எனக்கூறினார். அதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. அமைச்சரின் இந்த பேச்சை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த ஒரு நபர், திமுக அமைச்சர் மிகவும் நாகரீகமாக பேசுகிறார்.. கோபாலபுரம் வளர்ப்பு இப்படித்தான் இருக்கும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான வெங்கடேசனையே ஒரு ஆளு இருக்கான்னும், அந்த ஆளு கிட்ட கேளு என்றும் அமைச்சர் கே. என் நேரு பேசுகிறார் என்றால் அவருடன் இருக்கும் ஐபிஎஸ், ஐஏஎஸ் படித்தவர்கள் நிலைமை பாவம் என பதிவிட்டுள்ளார். மேலும் இதே போன்ற விமர்சனங்களை பலரும் முன்வைத்துள்ளனர் அதில் ஒருவர், இப்படி அவமானப் படுத்தினால் கூட கம்யூனிஸ்டு தோழர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று விமர்சித்திருந்தார். சு. வெங்கடேசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், சிறந்த தமிழ் புதின எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். இவர் எழுதிய காவல் கோட்டம் என்ற நூலுக்கு 2011ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இதேவைளையில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட ஒருவரையே கே .என் நேரு, அனாயசமாக பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இது குறித்து கண்டித்து அறிக்கை வெளியிட்ட மதுரை கம்யூனிஸ்ட் கட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது. எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும் என எச்சரித்தது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அமைச்சர் நேருவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என் நேரு அவர்கள், தோழர் வெங்கடேசன் எம்.பி குறித்து ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரீகம் அற்றது. பொது வாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள். ஏற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்.

— K.N.NEHRU (@KN_NEHRU)

தனக்கு எதிராக கண்டனக் குரல் வலுத்து வரும் நிலையில், திமுக அமைச்சர் கே என் நேரு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாராளுமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தம் படுத்திருந்தால் பொருத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.என் நேரு மன்னிப்பு கோரியுள்ள நிலையில் சர்ச்சை முடிவு வந்துள்ளது.
 

click me!