அர்ஜூன் சம்பத்துக்கு கார் கதவை திறந்துவிடுது போலீஸ். ஸ்டாலின் விழித்துக் கொள்ளுங்க.. அலறும் திருமுருகன் காந்தி

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2021, 5:23 PM IST
Highlights

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் சமீபத்தில் கோவையில் பள்ளிக்கூட மாணவி இறந்த விவகாரத்தில் பிரச்சனை வருகிறது, அப்போது அந்த இடத்திற்கு அர்ஜுன் சம்பத் வருகை தருகிறார். போலீஸ் அங்கு ஓடி வந்து அவருக்கு கார் கதவை திறந்து விடுகிறது.

தமிழக காவல்துறை தமிழ்நாடு அரசின் கையில் இல்லை  என்றும், அது நேரடியாக மத்திய அரசின் கையிலோ அல்லது அவர்களுக்கு சாதாரணமானவர்களின் கையிலோ இருக்கிறது என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்திற்கு தமிழக போலீஸ் கார் கதவை திறந்து விடும் அளவிற்கு நிலைமை வந்திருக்கிறது என்றும்,  தமிழக முதல்வர் ஸ்டாலின் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளார். 

பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. பாஜக அதிமுக மேற்கொண்ட கடுமையான  பிரச்சாரங்களையும் தாண்டி இந்த வெற்றியை பெற்றுள்ளது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து 7 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக மக்கள் திமுக அரசை பாராட்டு வரவேற்றனர்.ஆனால் தற்போது தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் எதிர்பார்த்த அளவிற்கு திமுக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தை பாஜகவும், அதிமுகவும் முன்வைத்து வருகின்றன. ஒருபுறம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி மற்றும் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மே 17 இயக்கம் போன்றவையும் திமுக மீது விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளன. 

சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவதற்கு காவல்துறை தடை விதித்ததுடன், அப்போது  மாற்று சமூகத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக தூண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்கு, ஆட்சிதான் மாறியது காட்சிகள் மாறவில்லை, திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக மனநிலையிலேயே போலீசார் நடந்து கொள்கின்றனர் என திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். அதேபோல் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து மோரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்தார். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் தொல். திருமாவளவனிடம் பேசியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதேபோல நேற்று முன்தினம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்திதை கேக் வெட்டி கொண்டாடியதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து விமர்சித்து பேசிய அவர், ஆட்சி மாறியது ஆனால் காட்சிகள் மாறவில்லை, ஆட்சிக்கு திமுக வந்தாலும் அதிமுக ஆட்சியில் நடந்தது போலவே நிலைமை தொடர்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதே வழக்கு போடுகிற போலீசாக தமிழக போலீஸ் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து திமுகவையும் காவல்துறையையும் விமர்சித்து இருப்பது கூட்டணிக்கு இடையில் சலசலப்பை ஏற்படுத்திள்ளது. இது ஒருபுறமிருக்க மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக போலீஸ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, மாறாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, அவர்களுக்கு சாதகமானவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர் கூறியதாவது, 

திமுக ஆட்சி வந்த 7 மாதங்களில் என்மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரன் இலங்கை இராணுவத்தினரால் கடலில் சுட்டு கொலை செய்ததை கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது, அதில் கலந்து கொள்வதற்காக நான்  சென்றிருந்தேன், அப்போது ராஜ்கிரனுடன் சென்ற 2 பேரின் நிலைமை என்ன என்பது தெரிய வேண்டும், மீனவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். இதற்காக என் 2 மீது வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இப்போது நிலைமைகளை பார்க்கும்போது திமுக அரசை பெருவாரியாக மோனம் காத்துவருகிறது. மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் போது அது குறித்து கேள்வி எழுப்புவது தான் மாநில சுயாட்சி, ஆனால் அதில் திமுக கவனம் செலுத்தவதாக தெரியவில்லை. தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டு அரசின் கையில் இல்லை அது நேரடியாக ஒன்றிய அரசின் கையிலோ அல்லது அதற்கு சார்பானவர்களின் கையிலோதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு காவல்துறையை திமுக அரசு வைத்திருக்கும் நிலையில், இந்துத்துவ சக்திகள் கோவையில் சசிக்குமார் என்பவர் இறந்தபோது எப்படி கலவரம் செய்தார்களோ அதேபோல வடமாநிலங்களில் எப்படி கணவரும் செய்கிறார்களோ, அதேபோல தமிழகத்திலும் கலவரம் செய்ய முடியும். ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் சமீபத்தில் கோவையில் பள்ளிக்கூட மாணவி இறந்த விவகாரத்தில் பிரச்சனை வருகிறது, அப்போது அந்த இடத்திற்கு அர்ஜுன் சம்பத் வருகை தருகிறார். போலீஸ் அங்கு ஓடி வந்து அவருக்கு கார் கதவை திறந்து விடுகிறது.  இத்துடன் அவருக்கு குடை பிடிக்கும் வேலை வரை தமிழக போலீஸ் செய்கிறது. அர்ஜுன் சம்பத் யார், அவர் ஆளுநரா? ராணுவ தளபதியா? அல்லது மத்திய அமைச்சரா? அவர் யார்? தமிழ்நாடு அரசு குறிப்பாக திமுக அரசு விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.  நாளைக்கு இந்துத்துவா சக்திகள் வடமாநிலங்களில் செய்வது போல தமிழகத்திலும் கலவரம் செய்வார்கள். அதற்காக பொய்யான தகவல்களை அவர்களே உருவாக்குவார்கள், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதை பரப்புவார்கள்,  இதுத்தான் உத்தரப் பிரதேச மாநலம் முசாபர் நகரில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

 

click me!