அமைச்சராக இருந்தால் அரசியல் நாகரிகம் வேண்டாமா..? கே.என்.நேருவுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 27, 2021, 5:08 PM IST
Highlights

பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக அமைச்சர் கே.என். நேரு அரசியல் நாகரிகமற்று பேசியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடந்த புதனன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நேரு, "சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். வெங்கடேசன்னு ஒரு ஆளு இருக்கான். அந்தாளுட்ட கேளுங்க. எங்கிட்ட கேட்கிறீங்க.." என்று ஒருமையில் பேசி பதிலளித்தார்.

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் குறித்து, அமைச்சர் நேரு பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமைச்சர் நேருவை கண்டித்து மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேருவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். இதனைக்கும் திமுக கூட்டணியில் தான் இருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. 

click me!