’ஆபரேஷன் அதிமுக!!’ செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்.. அலரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்..

By Ganesh RamachandranFirst Published Nov 27, 2021, 5:46 PM IST
Highlights

”அதிமுகவின் சீனியர்களில் செங்கோட்டையன் அனைவராலும் மதிக்கப்படும் சூப்பர் சீனியர். நடந்து முடிந்த சர்ச்சைக்குரிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவராகும் அவரது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது”

உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேசுகிறோம் என்று அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தான் இப்போது அரசியல் களத்தின் ஹாட் டாக். எல்லோரும் அன்வர் ராஜாவை அடிக்கப் பாய்ந்தாராமே சி.வி.ஷண்முகம் என்று பேசிக்கொண்டிருக்க, அதைவிட மிக முக்கியமான ஒரு விஷயத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர். ”அதிமுக தலைமை குறித்து செங்கோட்டையன் போட்டிருக்கும் ஒரு ஸ்கெட்ச் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று அவர் கேட்டபோது நமக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. காரணம் ஜெயலலிதா இருந்த போதே ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் செங்கோட்டையனை சைலண்ட்டாக்கினார்கள். அதிக அதிகாரமற்ற சீனியராகவே செங்கோட்டையன் வலம் வந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு செங்கோட்டையனை தான் முதலமைச்சராக்க எண்ணினேன் என்று சசிகலாவே சொன்னாலும், எடப்பாடியாரிடம் பெட்டிப் பாம்பாக அடங்கியே இருந்தார் செங்கோட்டையன். எந்த சர்ச்சையிலும் சிக்காத, தலைமைக்கு எதிராக எதுவும் செய்யாத சாதுவானவராகவே அவர் இருந்து வந்தார்.

ஆனால் அதே நேரம், கொங்கு மண்டலத்தில் அனைத்து சமூகங்களை சேர்ந்தவர்களாலும் விரும்பப்படும் அதிமுக முகமாகவே அவர் விளங்கினார். அதனாலேயே முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் அதிக முக்கியத்துவம் பெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்தினார். எடப்பாடியோ, ஓபிஎஸ்ஸோ, சசிகலாவோ - செங்கோட்டையன் யாரையும் பகைத்துக் கொள்ளமாட்டார். அவ்வளவு ஏன், பரம எதிரிக் கட்சியாகவே இருந்தாலும் ஸ்டாலினையும் அவர் அதிகம் பகைத்துக்கொள்ள மாட்டார். “சட்டமன்றத்தில் திமுக கண்ணியமாக நடந்துகொள்கிறது” என்று கூட அவர் பேசியிருக்கிறார். இப்படி அமைதியான சீனியராக இருந்துகொண்டு சப்தமே இல்லாமல் ஒரு மாஸ்டர் பிளானை வகுத்திருக்கிறார் செங்கோட்டையன் என்று நம்மிடம் கூறப்பட்ட போது ஆச்சர்யமாகவே இருந்தது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த செங்கோட்டையன், வழிகாட்டுதல் குழு தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார். அவர் சொன்னது நேரடியாகவே அதிமுக தலைமையை மாற்ற வேண்டும், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரைத் தாண்டி கட்சியின் வழிகாட்டுதல் குழுவுக்கு அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்பதையே குறித்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்த போதும் இதே விஷயத்தை விளக்கமாகப் பேசி புயலைக் கிளப்பியுள்ளார் செங்கோட்டையன். ஓ.பி.எஸ் மீண்டும் கட்சியில் இணைந்த போது வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் நிபந்தனையாக விதித்தார். அதன் அடிப்படையிலேயே குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் அதிகாரங்கள் பற்றி எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. எனவே அது ஒரு பெயரளவிலான குழுவாகவே உள்ளது. முழு அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடமே உள்ளது. இதைத்தான் உடைக்கச் சொல்கிரார் செங்கோட்டையன்.

அதுமட்டுமில்லாமல் கட்சியின் சீனியர்கள் அடங்கிய ஒரு பட்டியலை தயாரித்து, ”இவர்களையெல்லாம் கொண்ட 18 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும். அந்தக் குழுதான் கட்சியை வழிநடத்த வேண்டும். வேட்பாளர் தேர்வு, கட்சி நிர்வாகம், உறுப்பினர் சேர்க்கை, கூட்டணி முடிவுகள் என்று அனைத்தையும் அந்தக் குழுவே தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்டுப்பட வேண்டும், அப்போதுதான் கட்சியில் ஜனநாயகம் நிலைக்கும்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் திகைத்த நேரத்திலேயே, கொங்கு மண்டலத்தை சேர்ந்த செங்கோடையன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எழுந்து, “அண்ணன் சொல்வதுதான் சரி. அவர் பல பதவிகளில் இருந்த மிக மூத்த தலைவர். பேசாம அவரையே அந்தக் குழுவுக்கு தலைவராக்கலாம்” என்று கூறியுள்ளனர்.

அதிமுகவின் கோட்டையாக இன்றும் தமிழகத்தில் இருப்பது கொங்கு மண்டலம் மட்டுமே. அதில் அதிக செல்வாக்குமிக்கவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று கருதப்படும் வேளையில், அதிமுகவில் எழும் முதல் கொங்கு எதிர்ப்புக் குரல் இதுவே. அதுமட்டுமல்ல, அமைதியானவர் என்று பார்க்கப்பட்ட செங்கோட்டையனின் இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை யாருமே எதிர்பார்க்கவில்லையாம். ஓபிஎஸ், ஈபிஎஸ் இதை எப்படி சாமாளிக்கப்போகிறார்கள்? மறைமுகமாக செங்கோட்டையன் அதிமுக தலைமைக்குக் குறி வைக்கிறாரா? மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்று தன்னை உயிர்ப்புடன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுக முயற்சிகளுக்கு இது பாதிப்புகளை ஏற்ப்படுத்துமா? இப்படி பல கேள்விகள் அதிமுக வட்டாரங்களில் சூடு பறக்க விவாதிக்கப்படுகின்றன. பொருத்திருந்து பார்க்கலாம்...

click me!