
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா என இரு அணிகளாக செயல்பட்டன.
கடந்த 12ம் தேதி நடைபெற இருந்த ஆர்கே நகர் இடை தேர்தலில், இரு அணிகளும் களம் இறங்கின. இதில், பணம் பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்ததால், ஆர்கே நகர் தொகுதிக்கான இடை தேர்தல் ரத்தானது.
ஒரே கட்சியில் இரு அணிகள் தேர்தலில் போட்டியிடுவதால், கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
அதே நேரத்தில், வரும் ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதனால், கட்சியின் சின்னத்தை வைத்து மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ள இரு அணியினரும், மீண்டும் ஒன்று சேர முடிவு செய்தனர்.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக இரு அணியினரும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தீவிரமாக செயலப்ட்டு வருகின்றனர். ஆனால், அதில் ஏதாவது ஒரு முட்டுக்கட்டை விழுந்து கொண்டே இருந்தது.
அந்த நிபந்தனைகளில், ஓ.பி.எஸ். தரப்பில் சில நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன. அதில், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சி மற்றும் ஆட்சியில் சேர்க்க கூடாது. நீக்க வேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு நீதி விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்டவை அடங்கும்.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இதையொட்டி இரு அணியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில், இரு அணிகளும் இணைவது குறித்து ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினர். நள்ளிரவு 1 மணி வரை நடந்த பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இரு அணிகளிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இன்று மதியம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதில், அமைச்சர் செங்கோட்டையன், வைத்திலிங்கம், முனுசாமி, விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.