
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் அதிரடியாக, இரவோடு இரவாக அகற்றப்பட்டன.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா என இரு அணிகளாக செயல்பட்டன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடை தேர்தலில், இரு அணிகளும் களம் இறங்கின. ஆனால், பணம் பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆர்கே நகர் இடை தேர்தல் ரத்தானது.
இதற்கிடையில், ஒரே கட்சியில் இரு அணிகள் தேர்தலில் போட்டியிடுவதால், கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
மேலும், வரும் ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனால், கட்சியின் சின்னத்தை வைத்து மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ள இரு அணியினரும், மீண்டும் ஒன்று சேர முடிவு செய்தனர்.
ஆனால், அதிமுக பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கினால், மீண்டும் ஒரே அணியில் செயல்படலாம் என ஓ.பி.எஸ். அணி தெரிவித்தது.
முன்னதாக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே பெற டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை நேற்று இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா படங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ஓ.பி.எஸ். அணியினர் நிபந்தனை விதித்தனர்.
இதையொட்டி இன்று அதிகாலை முதல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டது. அங்கு ஜெயலலிதாவின் படம் கொண்ட புதிய பேனர்களை வைத்தனர்.