
ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் ஆதரவு "யாருக்கு" என்பதை எடைபோடும் தேர்தலாகவே அமைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் போட்டியிட்டாலும், வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்றே கூற வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அவர் நிரூபித்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.
உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவர் இறந்த பிறகு, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஜெ. மறைவுக்குப் பிறகு அணிகளாக பிரிந்த அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். பணப்பட்டுவாடா காரணம் காட்டி, ஆடர.கே.நகர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஏற்கனவே அதிமுக புரட்சி தலைவி அணியில் போட்டியிட்ட மதுசூதனன், அதிமுக அணியில்
போட்டியிடுகிறார். அதிமுக அம்மா அணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட டிடிவி தினகரன், தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிட்டாலும், எடப்பாடி பழனிசாமிதான் வேட்பாளர் என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால், இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்பதை எடைபோடும் தேர்தலாகவே இது கருதப்படுகிறது. அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தற்போது, எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு வந்துள்ளபோது இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வெறும் அதிகாரம் மட்டுமே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கைகளில் உள்ளது என்றும் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறி வருகிறார். தினகரனின் கூற்று உண்மையல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தரப்புக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அளவு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை எடைபோடும் தேர்தலாகவே உள்ளது.
மக்களுக்கு பணமும், தங்க நாணயமும் கொடுப்பதை ஒவ்வொரு அமைச்சரும் கண்காணிக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட வார்டுகளில் எல்லாம் முறையாக போய் சேர்ந்ததா என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் எடப்பாடி தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. பணமும் தங்க நாணயமும் கொடுக்கும் பொறுப்பை தனி நபரை நம்பி ஒப்படைக்க வேண்டாம் என்றும் அது முறையாக போய் மக்களிடம் போய் சேர்ந்ததா என்பதை விசாரிக்க முடியாது. எனவே, இதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர்களிடம் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆர்.கே.நகரில் பிரசாரத்தில் மதுசூதனனுக்காக ஓட்டுவேட்டையில் இறங்கியிருப்பது வெளியூர் ஆட்கள்தான் என்றும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களை அதிகம் பார்க்க முடியவில்லை கூறப்படுகிறது.