ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவங்கலாம் வாங்க..! ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்..!

First Published Dec 12, 2017, 12:04 PM IST
Highlights
arumugasamy commission notice to sheela balakrishnan


ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகன ராவ் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பிரமாணப் பத்திரங்களை பெற்ற விசாரணை ஆணையம், தற்போது விசாரணை நடத்திவருகிறது. இதுவரை 16 பேரிடம் நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அந்த 16 பேரில் 10 பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் தர்மராஜ், நாராயணபாபு, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குநர்கள் விமலா மற்றும் கலா, மயில்வாகணன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அவர்கள் கொடுத்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், தலைமை செயலகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள், ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் ஆகியோரிடமும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும் மேலும் பல தகவல்களையும் பெற விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில், முன்னாள் தலைமை செயலாளரும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆலோசகராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஷீலா பாலகிருஷ்ணன் வரும் 20-ம் தேதியும் ராம மோகன ராவ் வரும் 21-ம் தேதியும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.

ஜெயலலிதாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஷீலா பாலகிருஷ்ணனுக்கு போயஸ் கார்டனின் உள்விவகாரங்கள் கூட தெரியும் என கூறப்படுகிறது. எனவே அவரிடம் நடத்தப்படும் விசாரணையின்மூலம் பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விசாரணை ஆணையத்தின் அவகாசம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. விசாரணை ஆணையத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும் என ஆறுமுகசாமி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

click me!