
கடைசி மீனவரையும் மீட்டெடுப்பது அரசின் கடமை, எனவே அதுவரை மீட்புப்பணி தொடரும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஓகி புயலில் மாயமான தமிழக மீனவர்களில் இதுவரை 3262 பேரும் 322 படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 462 மீனவர்களையும் 56 படகுகளையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடைசி மீனவரை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணி தொடரும்.
மீட்கப்பட்ட மீனவர்களிடம் அட்சரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றைப் பெற்று அவர்களின் ஆலோசனையின்படி, மீனவர்கள் அளித்த இடத்தின் குறிப்பை வைத்து அந்த பகுதிகளில் மீனவர்களையும் அழைத்து சென்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது தொடர்பாக வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு முதல்வர் பழனிசாமி கண்டிப்பாக விரைவில் கொண்டு செல்வார். மேலும் கட்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.