
தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும், என்ற தீர்க்கமான நோக்கத்தில், 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோடியை பிரதமராக முன்னிறுத்தி, நவீன தொழில்நுட்ப யுத்தியில் பிரசாரம் செய்து வெற்றிக்கு வித்திட்ட அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை தி.மு.க. தன் பக்கம் இழுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் முறையாக பிரசாந்த் கிஷோரின் “இந்திய அரசியல் செயல்பாட்டுக்குழு(ஐ-பி.ஏ.சி.)” தென் மாநிலங்களை நோக்கி இப்போது திரும்பியுள்ளது. ஏற்கனவே, ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு அடுத்த தேர்தலில் வேட்டு வைக்கும் முயற்சியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியோடு “டீல்” முடித்துவிட்டது.
இப்போது தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கள ஆய்வு செய்து அரசியல் சூழலையும், மக்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள ஆய்வுப் பணியில் பிரசாந்த் கிஷோரின் “ஐ-பேக்” நிறுவனம் இறங்கியுள்ளது.
இதற்காக தமிழகத்தில் அரசியல் ஆர்வம் உள்ள, இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ரகசியாக பெற்று , தொகுதி மேலாளர்கள், அரசியல் ஊடக மேலாளர்கள் பணியிலும் அமர்த்த உள்ளது.
ஐ.பேக் நிறுவனத்தின் செயல்திட்டமே மிகவும் தனித்துவமானது. முதலில் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தை எப்படி செய்வது? என்று தீர்மானிக்கும், பின், பிரசாரத்துக்கு மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது? என்பதையும் தீர்மானித்து அடுத்தடுத்து, தனது யுத்திகளை மாற்றிக்கொண்டே செயல்படும்.
இதனால், எதிர்க்கட்சிகள் இவர்களின் பிரசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும், மக்களின் மனதில் நீண்டகாலப் போக்கில் மாற்றத்தை உருவாக்கி விடுவார்கள்.
ஏற்கனவே, ஆந்திராவில் கால் பதித்துள்ள “ஐ-பேக்” அரசியல் ஆய்வு நிறுவனம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து, இளைஞர்களை கள ஆய்வுக்காக எடுத்து முடித்துள்ளது. 2019ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமரவைக்கும் நோக்கில் வித்தியாசமான யுத்திகளை பயன்படுத்த ஐ.பேக் திட்டமிட்டு இருப்பதால், சந்திரபாபு நாயுடு உள்ளூர கலக்கத்தில் இருக்கிறார்.
இதேபோன்ற திட்டத்தை “ஐ-பேக்” நிறுவனம் தமிழகத்திலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. இரண்டு முதல் 3 அணிகளாக பிளவுபட்டு ஒற்றுமையில்லாமல் இருக்கும் இந்த சூழல் பிரசாந்த் கிஷோருக்கு “அல்வா” சாப்பிட்டது மாதிரியாகும்.
அதிலும், அதிமுக கட்சியின் ஆளுக்கு ஒருபக்கம் அறிக்கை விட்டுக்கொண்டும், எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆதலால், 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எளிதாக அ.தி.மு.க. வீழ்த்தி, தி.மு.க.வை அரியணையில் அமர வைக்கும் பணியை கிஷோர் டீம் மிகவும் எளிதாக செய்து முடித்துவிடும்.
கடந்த 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக 37 இடங்களில் வென்றது, கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கடும் போட்டி அளித்து குறிப்பிட்ட வாக்கு சதவீத வேறுபாட்டில் அ.தி.மு.கவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதன் காரணமாக, வெற்றி என்பது தி.மு.கவுக்கு அருகே இருப்பதால், இப்போதே கிஷோரின் “ஐ-பேக்” குழு தனது களப்பணியை தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
ஏனென்றால், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில், அதாவது தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் களத்தில் இறங்கி கிஷோரின் “ஐ-பேக்” அணி வேலை செய்தது. ஆனால், களத்தையும், மக்களின் மனதையும் சரியாகக் கணிக்க முடியாமல், காங்கிரஸ் கட்சி படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே ஐ-பேக் அணி களத்தில் இறங்கி “தீ”யாக வேலை பார்த்தது. விளைவு, சட்டப்பேரவைத் தேர்தலில், 10ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜனதாவை எளிதாகச் சாய்த்து, காங்கிரஸ் தலைமையிலான கேப்டன் அமரிந்தர்சிங்கிடம் ஆட்சியை பெற்று கொடுத்தது.
ஆதலால், தமிழகத்திலும் ஒரு பெரிய அரசியல் மாற்றத்துக்காக இப்போதே ஐ-பேக் அணி களத்தில் இறங்கிவிட்டது.
இது குறித்து “ஐ-பேக்” அணியைச் சேர்ந்தவரும், பெயரை வெளியிட விரும்பாதவர் ஒருவர் கூறுகையில் “ இதற்கு முன்நாங்கள் பணியாற்றிய அரசியல் களம் அனைத்தும் வட இந்தியாதான். இப்போது, முதல் முறையாக தென் இந்தியா பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறோம். நீண்டகால திட்டத்தை நோக்கி வந்து இருக்கிறோம்.
தமிழகத்தை நோக்கி எங்கள் திட்டத்தை திருப்பி இருக்கிறோம். எங்களை கட்சிகள் அமர்த்தினால், நிச்சயம் அவர்களுக்காக பணியாற்றுவோம். பிரசாரத்தில் மட்டும் எங்கள் பணி இருக்காது, அமைப்பு ரீதியாக எங்கள் செயல்பாடு வலுவாக இருக்கும். இதற்கான களப்பணிகள் தொடங்கப்பட்டு விட்டன” எனத் தெரிவித்தார்.
கடந்த 2014ம்ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியை பிரதமராக அமர வைத்தது, 2015ம் ஆண்டு தான்சானியா நாட்டில், ஜான் மகுபுலிக்கு வெற்றி தேடிக்கொடுத்தது, 2017ல் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியை 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் உட்கார வைத்தது, பீகாரில் நிதிஷ்குமாரை 2-வது முறையாக ஜெயிக்க வைத்தது என பிரசாந்த் கிஷோரின் “ஐ-பேக்” அணி வெற்றிகளை குறிப்பிடலாம்.
அரசியல் சாணக்கியத்தனத்தை நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பாக கையாலும் பிரசாந்த் கிஷோர் அணியை தி.மு.க. தன்னுடன் இணைத்திருந்தாலும் சரி, அல்லது இணைத்தாலும் சரி நிச்சயம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்வது உறுதி…