
டாக்டர் ராமதாஸ் சும்மாங்காட்டிக்கு அறிக்கை விட்டாலே அதை வைத்து அரசியல் தகராறு அல்லு கிளப்பும். இந்த நிலையில் தலைவர் புத்தகமே எழுதினால்! அதுவும் ஆல் லெவல் அட்ராசிட்டியில் சிக்கியிருக்கும் அ.தி.மு.க.வை பற்றி புத்தகம் எழுதியிருந்தால் பஞ்சாயத்து வேற லெவலில் இருக்காதா என்ன?!...
‘கழகத்தின் கதை: அ.தி.மு.க. தொடக்கும் முதல் இன்று வரை’ எனும் தலைப்பில் அக்கட்சியின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெ., இறப்பிற்குப் பின் அமர்க்களப்பட ஆரம்பித்த அ.தி.மு.க.வில் பலமாதங்களை தாண்டியும் பஞ்சாயத்துகள் இன்னமும் தீர்வை எட்டாத நிலையில் அக்கட்சியின் வரலாறை ராமதாஸ் எழுதியிருப்பது அரசியல் அரங்கில் அவர் கொளுத்திப் போட்டிருக்கும் தவுசண்ட் வாலா பட்டாசே என்கிறார்கள் அந்த புத்தகத்தை அறிந்தவர்கள்.
287 பக்கங்களுடன் மொத்தம் 64 அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தில் அ.தி.மு.க.வின் பல கட்ட நிலைகளையும், நிகழ்வுகளையும் கிண்டிக் கிளறி போஸ்ட்மார்டம் செய்திருக்கிறார் டாக்டர் சார்.
ரகளையான தகவல்களுக்கும் குறைவில்லை, ரசனையான தகவல்களுக்கும் குறைவில்லை அதில். குறிப்பாக இப்புத்தகத்தின் 17வது பக்கத்தில் ஒரு விஷயத்தை டீல் செய்திருக்கிறார் டாக்டர். அதாவது, தன்னை அரசியலுக்கு கொண்டு வர வேண்டுமென்று எம்.ஜி.ஆரை ஜெயலலிதா கட்டாயப்படுத்தினார் என்றும், துவக்கத்தில் யோசித்தாலும் பின் தன்னை போல் திரைத்துறையிலிருந்து ஜெயலலிதாவும் அரசியலுக்கு வர அவர் நினைத்தார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த காலம் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்த காலம்.
இந்த சூழலில் 1972 ஆகஸ்டில் மதுரை முத்து ஏற்பாட்டில் மதுரையில் கழகத்தின் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டதாம். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆரும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த மாநாட்டை மையமாக வைத்து ஜெயலலிதாவை தி.மு.க.வில் இணைக்க விரும்பினாராம் எம்ஜி.ஆர். அதனால் மாநாட்டில் ஜெயலலிதாவின் கலைநிகழ்ச்சியை நடத்த வேண்டும்,
அத்துடன் அவரை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கருணாநிதியிடம் கேட்டாராம். அதற்கு அவரோ “ஏ அப்பா! திராவிட இயக்கம் இதையெல்லாம் தாங்காது. கொஞ்சம் பொறுமையாக சிந்தியுங்கள்.” என்று பதில் சொல்லிவிட்டார். இதில் எம்.ஜி.ஆருக்கு பெரிய மன கசப்பு.
ஒவ்வொரு தி.மு.க. மாநாட்டிலும் எம்.ஜி.ஆர். தலைமையில்தான் ஊர்வலம் நடக்கும். ஆனால் மதுரை மாநாட்டு ஊர்வலத்துக்கு மு.க.முத்து (கருணாநிதியின் மகன்) தலைமை தாங்கினார். இதில் கடும் அதிருப்தியான எம்.ஜி.ஆர்., மாநாட்டுக்கு வந்தவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈப்பதற்காக ஜெயலலிதாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு திறந்த வாகனத்தில் மதுரை மாநகரை வலம் வர தொடங்கினார். இதனால் மாநாட்டு தொண்டர்கள் பந்தலிலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். வரும் சாலையில் குவிய தொடங்கினார்கள்.
இதையறிந்த கருணாநிதியின் உள்ளம் கொதித்தது. மாநாட்டு மேடையில் கருணாநிதியை ஆதரித்து எம்.ஜி.ஆர். பேசினாலும் கூட புகைச்சல் அதிகரித்துக் கொண்டே போனது. கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரை வெளியேற்றும் மனநிலைக்கு கருணாநிதி வந்துவிட்டார்.” என்று அந்த புத்தகம் விவரிக்கிறது.
இந்த புத்தகம் பொதுப்பார்வைக்கு வந்து இரு இயக்கத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் வாசிக்கும் பட்சத்தில் செம காரசாரமான விவாதத்தையும், கருத்தியல் மோதல்களையும் உருவாக்க தவறாது என்கிறார்கள் விமர்சகர்கள்.
தமிழக அரசியலில் இருக்கின்ற குழப்பங்களும், பஞ்சாயத்துகளும் போதாதென்று ஏதோ டாக்டர். ராமதாஸால் முடிந்த உபகாரம் இது!
அவ்வ்வ்!...