மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க கட்டாயப்படுத்துறாங்க... ஆளுங்கட்சிக்கு சாதகமா நடக்குறாங்க..? அலறும் தோழர்கள்..!

By Asianet TamilFirst Published Mar 10, 2021, 8:29 AM IST
Highlights

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக கைவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று தபால் வாக்கிற்கான ஒப்புதல் பெறுவது, இல்லையெனில் அதற்கான விண்ணப்பக் கடிதத்தை அளிக்க வலியுறுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்வது என்பதற்கு மாறாக, அவர்களை கட்டாயப்படுத்துவது என்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும், நேரடியாக வாக்களிக்க விரும்புகிற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் வாக்களிக்க ஏதுவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டுமே தவிர, அனைவரிடத்திலும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதலை பெற அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தக்கூடாது. அரசு அதிகாரிகளின் இந்த அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்வதோடு இது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. கட்டாயப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை முற்றாக கைவிட தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.” என்று அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

click me!