
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் அராஜாக பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் இன்று காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். இது அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதனைக் கண்டித்து தஞ்சாவூர், ஜெபமாலைபுரத்தில் உள்ள பணிமனையில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இன்று காலை 5 மணி முதல் பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தொமுச உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.
தகவலறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோர் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் 7.15 மணியளவில் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர்.