ஜெயலலிதா மரணம்... முட்டுக்கட்டையாக இருக்கும் அப்பல்லோ மருத்துவமனை... பரபர குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Oct 1, 2021, 10:28 AM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். இது மர்ம மரணம். இந்த மரணம் எப்படி ஏற்பட்டது? 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவமனைதான் தடையாக  உள்ளது’என உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். இது மர்ம மரணம். இந்த மரணம் எப்படி ஏற்பட்டது? என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம்  அமைக்கப்பட்டது. அதன்படி பலரிடமும் இந்த விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அந்த ஆணையம் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.  

அதே நேரம், இந்த ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘மனுவில் முகாந்திரம் இல்லை’ எனக்கூறி தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி அப்துல்நசீர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ‘‘இந்த வழக்கின் வாதம் இப்போதே முடிந்து விடுவதற்கான சாத்தியம் கிடையாது. ஏனென்றால், எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சில நாட்கள் அவகாசம் தேவைப்படும். அதனால், வழக்கை தசரா விடுமுறை வரை ஒத்திவைக்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

 

அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘இந்த வழக்கில் புதியதாக வாதங்களை முன்வைக்க ஒன்றும் கிடையாது. ஏனென்றால் ஏற்கனவே அனைத்து வாதங்களும் முடிந்து விட்டது. ஆணையத்தின் விசாரணையும் ஒரு மாதத்தில் முடியும் நிலையில் உள்ளது. எனவே, வழக்கை இன்றே விசாரித்து முடிக்கலாம். இந்த வழக்கில் ஏற்கனவே  பிறப்பித்துள்ள இடைக்கால தடையையும் நீதிமன்றம் நீக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வேண்டும் என்றே மருத்துவமனை தரப்புதான் தாமதப்படுத்தப்படுகிறது’ என குற்றம்சாட்டினார். இதையடுத்து, அக்டோபர் 20ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

click me!