மறைந்தும் தமிழனுக்கு கவுரவத்தை தேடிதந்த நடிகர் திலகம்.. சிவாஜியின் படத்தை முகப்பு பக்கத்தில் வைத்த கூகுள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2021, 9:16 AM IST
Highlights

300 திரைப்படங்கள் நடித்து நடிப்புக்கு உதாரணமாக திகழ்ந்தவர் அவர்.1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை சக்சஸ் என்ற வசன உச்சரிப்பின் மூலம் தொடங்கியவர் சிவாஜி கணேசன்.

தமிழ் திரையுல நடிப்பின் ஜாம்பவான்... வரலாற்று நாயகன்... நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்த நாளையொட்டி கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சிவாஜி கணேசனின் புகைப்படத்தை வைத்து கௌரவப்படுத்தி உள்ளது. இது தமிழர்களுக்கும் தமிழ் திரையுலகிற்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது. தனது தத்ரூபமான நடிப்பின் மூலமாகவும், வசனம் பேசும் வார்த்தை உச்சரிப்பு மூலம், கம்பீர  நடை உடை பாவனையில் மூலம், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும்  அரை நூற்றாண்டு காலம் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 

சுமார் 300 திரைப்படங்கள் நடித்து நடிப்புக்கு உதாரணமாக திகழ்ந்தவர் அவர்.1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை சக்சஸ் என்ற வசன உச்சரிப்பின் மூலம் தொடங்கியவர் சிவாஜி கணேசன். தமிழ், இந்தி மொழி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், கடந்த 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படத்துடன் தனது திரை பயணத்தை முடித்துக் கொண்டார்.  நடிப்புலக சக்கரவர்த்தி, நடிகர் திலகம் என பல பட்டப்பெயர்கள் அவருக்கு உள்ளது. நடிப்பில் சிவாஜியை விஞ்ச எவரும் இல்லை என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. தாதாசாகெப் பால்கே தொடங்கி பல சர்வதேச விருதுகளை பெற்ற கலைத்தாயின் தலைமகன் அவர்.

தனது நடிப்பின் மூலம் பல சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் கண்முன் நிறுத்தியவர் சிவாஜிகணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், வா.உ.சி உட்பட இளம் தலைமுறை நேரில் பார்த்திராத வீரர்களையும், தியாகிகளையும் திரையில் வாழ வைத்தவர் அவர். தமிழர்கள் எங்கெல்லாம் பரவிக் கிடக்கிறார்களோ அங்கெல்லாம் சிவாஜிகணேசனின் 93 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் ' டூடுலில்'  சிவாஜி கணேசனின் திருவுருவப் படத்தை வைத்து அவரை கவுரவித்துள்ளது.  இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது.
 

click me!