அழகான நாடாளுமன்றம் இருக்க, 20 ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் ஏன்..? மோடியை கேட்கிறார் கே.எஸ். அழகிரி.!

By Asianet TamilFirst Published Dec 14, 2020, 10:35 PM IST
Highlights

நமக்கு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும்போது, ரூ.20 ஆயிரம் கோடியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்புக்கு பின்னர், மோடி அரசு திடீரென அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான தொகுப்பு நிதி குறித்து சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதியில், ரூ.3 லட்சம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 4–ந்தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் 80 லட்சத்து 93 ஆயிரம் வங்கி கணக்குகளுக்கு, ரூ.2.05 லட்சம் கோடி செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 40 லட்சத்து 49 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.1.58 லட்சம் கோடி மட்டுமே கடனாக செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஏற்கனவே நமக்கு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும்போது, ரூ.20 ஆயிரம் கோடியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? 
அழகுமிக்க நாடாளுமன்ற வளாகத்தையே காட்சி பொருளாக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இதை பார்க்கிறபோது துக்ளக்கின் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது.” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!