தேர்தலில் சென்னையில் போட்டியிடும் கேப்டன் விஜயகாந்த்..? விருகம்பாக்கத்தில் களமிறங்க அதிரடி முடிவு...!

By Asianet TamilFirst Published Dec 14, 2020, 10:09 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தேமுதிக கட்சி கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக முதன் முறையாக தனித்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் விஜயகாந்த் வெற்றிபெற்றார். 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோடு எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார்.

 
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அந்தக் கூட்டணி சார்பில் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக ஆயத்தம் ஆகிவருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தாலும், 41 தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்கும் கட்சியுடந்தான் கூட்டணி அமைப்போம் அல்லது தனித்து போட்டியிடுவோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்..


இதற்கிடையே உடல்நலம் குன்றியுள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், விஜயகாந்த் தேர்தலில் போட்டிடுவார் என்றும் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் அவர் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயகாந்த் இந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடியிருப்பதாலும் உடல்நலம் குன்றியிருப்பதால் இத்தொகுதியில் போட்டியிட்டால் பிரசாரத்தில் ஈடுபடுவது எளிதாக இருக்கும் என்பதாலும் இந்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!