
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. நடிகர் விஜயின் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டு, 129 இடங்களில் வென்றனர்.
இது பல அரசியல் கட்சிகளின் ஸ்ட்ரைக் ரேட்டை விட அதிகமாகும். கடந்த காலங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்ற போதிலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்திருந்தது அதுவே முதல்முறையாகும். இந்த முறை மீண்டும் அனுமதி அளித்து இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமா அல்லது தனித்து போட்டியிடுவதா என அலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று கூறினர். அதனடிப்படையில் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். திமுகவை ஆதரித்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இன்று முதல் பிரச்சாரம் செய்ய உள்ளோம். திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமைக்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும் அப்போது பில்லா ஜெகன் கூறினார். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்க்கே ‘ஷாக்’ கொடுத்து இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.