
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை அதிகரிகள் இன்று காலை முதல் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
மேலும், நடிகர் சரத்குமார், மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, தனியார் விடுதிகள் உள்பட 31 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இந்த அதிரடி சோதனையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் ரூ.1.8 கோடி, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை வீட்டில், வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் ரெய்டு நடத்துவதை அறிந்ததும், ஏராளமான தொண்டர்கள் அங்கு திரண்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த மத்திய பாதுகாப்பு படை போலுசார், அவர்களை உள்ளே நுழைய விடமால் தடுத்தனர்.
அப்போது, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அமைச்சர் விஜயபாஸ்கரை வெளியே வர சொல்லும்படி கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், என்னை காலையில் இருந்து வெளியே வரவிடவில்லை. உள்ளூர் போலீசார், வீட்டின் வெளியேயும், மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளேயும் இருக்கின்றனர்.
வருமான வரித்துறையினரும், மத்திய பாதுகாப்பு படையினரும் அத்துமீறி செயல்படுகின்றனர். என் வீட்டில் இருந்து எந்த பொருளும் பறிமுதல் செய்யவில்லை. ஆனால், கைதியை போல் நடத்துகின்றனர்.
எனது மகளை பள்ளிக்கு கூட அனுப்ப மறுக்கின்றனர். அதிமுகவை அழிக்க வருமான வரித்துறையினர் சதி செய்கின்றனர் என்றார்.