
உத்தரப்பிரதேசத்தில் உள்ள குழந்தைகளுக்கு தற்போது 4-ம் வகுப்பில் இருந்துதான் ஆங்கிலக்கல்வி கிடைத்து வருகிறது. இது இனிமேல் நர்சரி பள்ளியில் இருந்துதரப்படும். ஆங்கிலக்கல்வி அடிப்படையானது என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. அதேசமயம், பசுவதை தடை, சட்டவிரோத இறைச்சிக் கடைகளுக்கு சீல், “ஆன்ட்டிரோமியோ” படை ஆகியவற்றுக்கு எதிர்ப்பும், அதேசமயம் வரவேற்பும் எழுந்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஆதித்யநாத் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
எனது நடவடிக்கைகளான சட்டவிரோத இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைப்பது, “ஆன்ட்டி ரோமியோ” படை ஆகியவை குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், சட்டத்தை நாங்கள் தவறாக பயன்படுத்த மாட்டோம்.
சட்டத்துக்கு மதிப்பு அளிக்காதவர்கள் எதற்கும் கவலைப்படத்தேவையில்லை. ஆனால், சட்டத்தின் மீதே நம்பிக்கை இல்லாமல் இருந்தால், நிச்சயம் வருத்தப்பட வேண்டியது இருக்கும். நான் கொண்டு வந்த “ஆன்ட்டி ரோமியோ” படை என்பது பெண்களையும், மாணவிகளையும் காப்பதற்காகத்தான்.
எத்தனை மாணவிகள் ரவுடிகள், சமூக விரோதிகளின் தொந்தரவுகளுக்கு பயந்து, படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கிறார்கள் தெரியுமா. ஆன்ட்டி ரோமியோ படை யாரையும் தேவையின்றி துன்புறுத்தாது.
குற்றம் செய்ய எண்ணம் இல்லாதவர்கள், பூங்காக்களில் எப்போது வேண்டாமானாலும் வரலாம், போகலாம். ஆனால், பெண்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளையும் போதுதான் நடவடிக்கை பாயும்.
உத்தரப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு இப்போது 4-ம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலக்கல்வி கொடுக்கப்பட்டு வருகிறது.
இனிமேல் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நர்சரி பள்ளியில் இருந்து வழங்கப்படும். என்னைப் பொருத்தவரை ஆங்கிலக்கல்வி அடிப்படையாகும் இந்துத்துவா ஆதரவாளராக இருந்து கொண்டு ஆங்கிலத்துக்கு ஆதரவு அளிக்கிறேனே எனக் கேட்கலாம், நான் பாரம்பரியம், கலாச்சாரம் மீது நம்பிக்கை உள்ளவன், அதேசமயம் நவீனமும் கலந்து இருக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளவன்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் ஆலோசித்து எந்த முடிவும் நாங்கள் எடுக்கமாட்டோம். தேர்தல் வாக்குறுதியில் என்ன சொல்லி இருக்கிறோமோ அதைச்செய்வோம். சட்டவிரோத இறைச்சிக் கடைகளை நாங்கள் திட்டமிட்டு மூடவில்லை. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பைத்தான் அதைத்தான் நாங்கள் சட்டத்தின் துணையுடன்
செயல்படுத்துகிறோம்.
பதவிக்கு வந்தவுடன் அதிகாரிகளையும் , போலீசாரையும் இடம் மாற்றம் செய்தவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு திறமைஉண்டு அந்த திறமையைப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்பட வேண்டும். பணியில் திறமையாகச் செயல்படாவிட்டால், மற்றவர்களைப் போல், இடமாற்றம் செய்யமாட்டேன், ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பி விடுவேன்.
அதேபோல உத்தரப்பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதிலும் உடன்பாடு இல்லை. ஏற்கனவே இதுபோன்ற திட்டத்தை முன்பு இருந்த அரசுகள் கொண்டுவந்து தோல்வி அடைந்துவிட்டன.
ஆதலால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடையை நடத்திக்கொள்ள அனுமதி கொடுப்போம். இதை மீறுவோர் மீது நடவடிக்கையும் உரிமமும் ரத்து செய்யப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.