
மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழுமையாக ஒத்துழைக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று வெளியே வந்தார்.
அப்போது கட்சி பணிகளில் மீண்டும் பணியாற்றுவேன் என தெரிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது.
ஏற்கனவே டிடிவி அறிவித்தபடி கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
பின்னர், சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அதிமுகவில் இருந்து என்னை விலக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் இன்னும் 6 மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு என் பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, திடீரென அதிமுகவை சேர்ந்த 30 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் ஜெயக்குமாரின் பேச்சுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் தினகரனை வெளியே விட்டு குழப்பத்தை உண்டு பண்ணுவது பாஜக தான் என்ற கருத்தும் ஓடிவருகிறது.
அதிமுக ஆட்சி கலைய கூடாது, அனைவரும் ஒரு அணியாக திரள வேண்டும் என்று பாஜக கருத்து கூறி வந்தாலும் எப்படியாவது அதிமுகவை பினாமியாக்கி பாஜக ஆள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது.
தினகரனுக்கு ஆதரவு பெருகியதால் ஜெயக்குமார் வட்டாரங்கள் கதிகலங்கி போயுள்ளது.
இந்நிலையில் சென்னை காமராஜ் துறைமுகத்தில் புதிய சரக்கு பெட்டக முனையம் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழுமையாக ஒத்துழைக்கும் என தெரிவித்தார்.