
தமிழக சட்டப் பேரவையில் அரசுக்கு பெரும்பான்மை குறைந்தால் ஆட்சியைக் கலைக்க வேண்டும்…ஸ்டாலின் அதிரடி பேச்சு…
வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டசபையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை குறைந்தால், ஆட்சியை கலைக்கக் கோரி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குளங்கள் திமுக சார்பில் தூர் வாரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் , சென்னை கோவூர் குளம் தூர் வாரும் பணியை ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசின் குளங்கள் தூர்வாரப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக அரசை பாஜக இயக்குகிறது என்பதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போது தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் தான் எடப்பாடி அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும், மக்கள் பணியாற்ற அவர்கள் தவறி விட்டனர் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்..
வரும் 14 ஆம் தேதி தமிழக சட்டசபை கூடும் போது ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை குறைந்தால், ஆட்சியை உடனடியாக கலைக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து முறையிடப் போவதாக தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிக்கப் போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.