கேரள வெள்ள நிவாரண நிதி… தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வழங்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

By Selvanayagam PFirst Published Aug 24, 2018, 10:56 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது ஒரு நாள் ஊதியம் சுமார் 120 கோடி ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைகொட்டித்தீர்த்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது.

தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டி ருக்கிறது. இருப்பினும் வரலாறு காணாத அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

அம் மக்களின் துயரத்தில் நாடே பங்கெடுத்துள்ளது. நாள்தோறும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நிவாரணப்பொருட்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் பல்வேறு தரப்பினும் நிவாரணப்பொருட்களை அனுப்பி வருவதோடு தன்னார்வ பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒருநாள் சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என அனைத்துத் துறையிலும் சேர்த்து 14 லட்சம் ஊழியர்கள் பணி புரிகிறார்கள். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

சுமார் 120 கோடி ரூபாயை நிவாரணநிதியாக தமிழகஅரசிடம் வழங்கிறார்கள். தமிழக அரசு  அந்த நிதியைக் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம்  வழங்க உள்ளது. இதற்காக அரசு ஊழியர்களது மாத சம்பளத்தில் இருந்து இதற்கான தொகையை பிடித்தம் செய்துகொள்ளுமாறு தமிழக அரசிடம்  அரசு ஊழியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

click me!