ஈரோட்டில் கெத்து காட்டிய ஆளுநர்! கருப்புக் கொடி காட்டாமல் பம்மிப் பதுங்கிய தி.மு.க!

By sathish kFirst Published Aug 30, 2018, 10:30 AM IST
Highlights

ஈரோட்டில் ஆய்வுப் பணிகளுக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கருப்புக் கொடி காட்டாமல் தி.மு.க பின்வாங்கியது அக்கட்சியினரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஈரோட்டில் ஆய்வுப் பணிகளுக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கருப்புக் கொடி காட்டாமல் தி.மு.க பின்வாங்கியது அக்கட்சியினரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப் பயணம் செய்து வருகிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களை அழைத்து ஆளுநர் ஆய்வுக் கூட்டங்களும் நடத்தி வருகிறார்.

ஆளுநர் பன்வாரிலாலின் இந்த நடவடிக்கை மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று தி.மு.க கூறி வருகிறது. எனவே ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.கவினர் கருப்புக் கொடி காட்டி வருகின்றனர்.

 கடந்த ஜூன் மாதம் கடைசியாக நாமக்கல்லுக்கு ஆளுநர் பன்வாரிலால் சென்று இருந்தார். அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்சிய தி.மு.கவினர் சிலர் திடீரென ஆளுநர் வாகனத்தின் மீது கொடிக்கம்பங்களை வீசினர். இதனால் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 தி.மு.கவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கு முன்பாக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டும் தி.மு.கவினர் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வந்தனர்.

 ஆனால் ஆளுநர் வாகனத்தின் மீது கருப்புக் கொடி வீசப்பட்டதால் தி.மு.கவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுநாள் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றார். அவரும் கைது செய்யப்பட்டார். ஆனால் ரிமாண்ட் செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டது.

அதில் ஆளுநர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்யும் போது இடையூறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் ஆளுநர் மாளிகை எச்சரித்தது. 

இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படப்போவதில்லை என்றும் அடுத்த முறை ஆளுநர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடத்திற்கு தானே நேரில் சென்று கருப்புக் கொடி காட்ட உள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் சுமார் 2 மாதங்களாக ஆளுநர் எங்கும் செல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா பணிகளில் ஆளுநர் ஈடுபட்டார்.

மேலும் அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளை அழைத்து ஈரோட்டில் ஆய்வுக் கூட்டமும் நடத்தினார். ஆனால் எங்குமே தி.மு.கவினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆளுநரின் சுற்றுப்பயணத்திற்கு இடையூறு செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்கிற எச்சரிக்கைக்கு தி.மு.கவினர் பயந்துவிட்டனரா? என்று இதன் மூலம் கேள்வி எழுந்துள்ளது.

click me!