ஸ்டாலினை விமர்சிக்க வேண்டாம்! பா.ஜ.க மேலிடத்தில் இருந்து வந்த திடீர் உத்தரவு!

By vinoth kumarFirst Published Aug 30, 2018, 10:11 AM IST
Highlights

தி.மு.க தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினை நேரடியாக விமர்சிக்க வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினை நேரடியாக விமர்சிக்க வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் எம்.பிக்கள்., கிடைப்பார்கள் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்தது முதலே தி.மு.க.வுடன் நெருக்கம் பாராட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெல்லையில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழிசை சவுந்திரராஜன் பேசிய பேச்சு அவர் பா.ஜ.க. மாநில தலைவரா இல்லை தி.மு.க பிரமுகரா என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. 

இதே போல் தி.மு.க தரப்பிலும் கூட கலைஞர் நினைவேந்தலுக்கு அமித் ஷா வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து பா.ஜ.க மீதான விமர்சனத்தை குறைத்துக் கொண்டனர். வாஜ்பாய் அஸ்தி சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். இதனால் பா.ஜ.க –தி.மு.க கூட்டணிக்கான சூழல் உருவாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க துடிக்கும் மோடி அரசை விரட்ட வேண்டும் என்று பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 

பொதுக்குழு கூடுவதற்கு முதல் நாள் வரை நெருக்கம் காட்டி வந்த ஸ்டாலின், திடீரென மோடி அரசை விமர்சித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஸ்டாலின் மோடி அரசை விமர்சித்ததற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அன்றைய தினமே நடைபெற்ற வாஜ்பாய் நினைவேந்தலில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான பிரகாஷ் ஜவடேகர், கருணாநிதியையும் புகழ்ந்துவிட்டு சென்றார். மேலும் ஸ்டாலினின் மோடி அரசு மீதான விமர்சனத்திற்கு தமிழிசை, ஹெச்.ராஜா போன்றோர் பெரிய அளவில் எதிர்வினை ஆற்றவில்லை. 

எப்போது ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் ஹெச்.ராஜா கூட, களத்தில் சந்திக்க தயார் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க வேண்டாம் என்று பா.ஜ.க மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு தான் காரணம் என்கிறார்கள். இல்லை என்றால் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு ஹெச்.ராஜா சரியான பதிலடி கொடுத்திருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

click me!