#BREAKING நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அனுமதி... டாஸ்மாக் சர்ச்சையால் தமிழக அரசு தடாலடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 13, 2021, 12:18 PM IST
Highlights

கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்துள்ள போதும், மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படி ஜூன் 21ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. 

அதே சமயத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூலமாக கொரோனா பரவாது, டீக்கடைகள் மூலமாக தான் கொரோனா தொற்று பரவுமா? என சமூக வலைத்தளத்தில் பலரும் அரசின் முடிவை விமர்சித்து வந்தனர். அதுமட்டுமின்றி தேநீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கைகளும் எழுந்தது. எனவே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ள 11 மாவட்டங்களைத் தவிர பிற 27 மாவட்டங்களில் நாளை முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து டீ வாங்கும் படியும்,  நெகிழி
 பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்தவும் கட்டாயம் அனுமதி இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம் என்றும், 

பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

click me!