பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதற்காக என்மீது முதல்வர் இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்று அதிரடியாக சவால்விட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டு, ஆவடி நாசர் நீக்கப்பட்டு, புதிதாக டி. ஆர். பி. ராஜாவை, முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவில் கொண்டுவந்துள்ளார். ஆவடி நாசர் குறித்து பல பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வைத்து வந்தோம்.
அமைச்சரவை மாற்றம்
ஊட்டச்சத்து பெட்டகம் ஊழல் ரூ. 77 கோடியில் தொடங்கி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பால் விலையை குறைப்பதாக சொல்லியிருந்தனர். ஆவின் பாலின் விலையை ரூ. 3 குறைப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக 2022 அந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 முறை, ஆவின் பாலின் விலையை உயர்த்தினர். குறிப்பாக ஆரஞ்சு பாக்கெட்டின் விலையை ரூ. 12 வரை உயர்த்தினார்கள்.
ஆவடி நாசர்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டில் கொழுப்பின் அளவை 4. 5 சதவீதத்தில் இருந்து 3. 5 சதவீதமாக குறைத்துவிட்டனர். அரசால், பால் விலையை விவசாயிகளுக்கு உயர்த்திக் கொடுக்க முடியவில்லை. மற்றொரு பக்கம் பாலின் விலையையும் குறைக்க முடியவில்லை. ஆனால், பாலின் விலையைக் குறைப்பதற்காக பாலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்துள்ளனர். இந்த நிலையில், ஆவடி நாசரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்து, புதிதாக அமைச்சரவையை மாற்றி ஒரு முயற்சி எடுத்திருக்கிறார்.
டிஆர்பி ராஜா
ஆவடி நாசர் நீக்கத்தை தமிழக பாஜக வரவேற்கிறது. புதிதாக வந்துள்ள அமைச்சராவது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருப்பதை செய்வார் என்று நம்புகிறேன். பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலையை குறைத்து வழங்க வேண்டும். நிர்வாகத்தை சரியாக கவனத்தில்தான் இது சாத்தியமாகும். எந்த குடும்பம் அதிகமாக தமிழகத்தில் நிறுவனங்கள் வைத்துள்ளனரோ, அவர்களுக்குத்தான் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றால், டிஆர்பி ராஜா தொழில் துறைக்கு அவர் பொருத்தமானவர்.
பிடிஆர்
அவருடைய தந்தை, சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே 20 நிறுவனங்களுக்கு மேல் உள்ளன. அனைத்து துறையிலுமே அவரது குடும்பத்தினர் நிறுனங்களை நடத்தி வருகின்றனர். சாராய உற்பத்தியில் இருந்து சாராய விற்பனை வரை அனைத்தையும் தாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்பதைத்தான், டிஆர்பி ராஜா நியமனத்தை காட்டுகிறது. அதேபோல், பிடிஆரை நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து ஐடி துறைக்கு மாற்றியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் பிடிஆரின் துறையை மாற்ற வேண்டிய காரணம் என்ன? ஒருபக்கம் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிடராக பிடிஆர் இருந்தார். இந்தியா முழுவதும் தமிழக அரசின் குறிப்பாக திராவிட மாடலின் சாதனைகளை பிடிஆர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால், பிடிஆர் ஆடியோ வெளிவந்த ஒரே காரணத்துக்காக, அவரை நிதித்துறையில் இருந்து மாற்றி , ஐடி துறைக்கு அனுப்பியிருப்பதை எந்த காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் தவறு அவர் செய்யவில்லை.
இதையும் படிங்க..நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.! புரட்சி தளபதியை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ.!!
30 ஆயிரம் கோடி
தவறு செய்திருப்பது திமுகவின் முதல் குடும்பம். நேற்றுமுன்தினம் முதல்வர் ஸ்டாலின் என்மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நான் முதல்வருக்கு சவால் விடுகிறேன், பிடிஆர் ஆடியோவில்கூட முதல்வரைத்தான் நான் குற்றம்சாட்டியிருக்கிறேன். இது குற்றம் என்றால், அதுவும் குற்றம்தானே? சென்னை மெட்ரோவில் முதல்வர் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று சொன்ன அதே அண்ணாமலைதான், பிடிஆர் ஆடியோவில் முதல்வரின் மகனும், மருமகனும், குடும்பமும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளீர்கள் என்றுதான் நானும் சொல்கிறேன்.
ஆடியோ விவகாரம்
எனவே, அதற்கு ஒரு நியாயம், இதற்கு ஒரு நியாயம் வேண்டாம். முதல்வர் அரசு வழக்கறிஞரைப் பயன்படுத்தி, பிடிஆர் ஆடியோவை நான் வெளியிட்டதற்காக, என் மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், அந்த ஆடியோ நீதிமன்றத்திற்கு வரவேண்டும். அந்த ஆடியோவை நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும். நீதிமன்றத்தில் முழு ஆடியோவையும் ஒப்படைக்க நான் தயாராக இருக்கிறேன்.
1 மணி நேர ஆடியோ
ஒருமணி நேரம் நடந்த அந்த உரையாடல் நீதிமன்றத்துக்கு செல்லும். அந்த ஆடியோவில் இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன. ஏன் 3வது மற்றும் 4வது ஆடியோவை வெளியிடவில்லை என்றால், பிடிஆர் இதில் பகடை காயாக வேண்டாம் என்ற ஒரே பயத்தில்தான். அவரை பகடை காயாக பயன்படுத்திவிட்டு, அவரை பதவியில் இருந்து மாற்றிவிட்டு, இன்னொரு அமைச்சரை நியமித்து அரசை நடத்திவிடலாம் என்று முதல்வர் நினைத்தால், அது பகல் கனவு. எனவே, இதற்காக முதல்வர் என்மீது ஒரு அவதூறு வழக்கு தொடர வேண்டும்.
அண்ணாமலை சவால்
இதில் பிடிஆர் தவறு செய்யவில்லை. தவறு செய்தவர்கள் குறித்து பிடிஆர் பேசியிருக்கிறார். என்மீது இதுதொடர்பாக அவதூறு வழக்குத் தொடர்ந்தால், முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நான் தயாராக இருக்கிறேன். சுதந்திரமான விசாரணையை நீதிமன்றம் நடத்த வேண்டும். அதில் கூறியுள்ள கருத்துகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!