போலீஸ் இன்ஸ்பெக்டரை விரலை நீட்டி எச்சரித்த அண்ணாமலை…! மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

By manimegalai aFirst Published Nov 9, 2021, 10:04 AM IST
Highlights

தலைச்சிறந்த ஐ.பி.எஸ். அதிகாரி, கர்நாடகா சிங்கம் என பெயர் பெற்ற அண்ணாமலை, ரவுடி அரசியல்வாதிகளை போல காவல் ஆய்வாளரை விரலை நீட்டி எச்சரித்ததும் பலரையும் முகம் சுழிக்கச் செய்துள்ளது.

தலைச்சிறந்த ஐ.பி.எஸ். அதிகாரி, கர்நாடகா சிங்கம் என பெயர் பெற்ற அண்ணாமலை, ரவுடி அரசியல்வாதிகளை போல காவல் ஆய்வாளரை விரலை நீட்டி எச்சரித்ததும் பலரையும் முகம் சுழிக்கச் செய்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அரசு சமீபத்தில் தன்னிச்சையாக உபரிநீரை வெளியேற்றியது. அணையின் முழுக் கட்டுப்பாடும் தமிழ்நாடு அரசிடம் உள்ளபோதும், இதுகுறித்த எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாத தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அணையின் ஓரங்களில் இருக்கும் மரங்களை வெட்ட அனுமதிகொடுத்த கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், நீர்வளத் துறை அமைச்சரான துரைமுருகனும், கேரள அரசை கண்டிக்காமல், விதிகளின்படியெ கேரளா அரசு தண்ணீரை திறந்ததாக விளக்கம் அளித்தார்.

கேரள அரசின் செயல்பாட்டால் தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். இதனை தங்களுக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அதிமுக, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளன. தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில், தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளை கண்டித்து நேற்றைய தினம் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பா.ஜ.க. தொண்டர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

போராட்டக்களத்திற்கு சென்ற அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உசிலம்பட்டியில் நிர்வாகிகள் வரவேற்பை ஏற்ற பின்னர் அண்ணாமலை புறப்படத் தொடங்கினார். அப்போது அவரை தடுத்த தொண்டர்கள், அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையா தேவர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர், சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி பெறவில்லை என்று கூறி பா.ஜ.க.-வினரை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.

காவல் ஆய்வாளர் செயல்பாட்டால் எரிச்சலுடன் காரில் இருந்து இறங்கிய அண்ணாமலை, காவல் ஆய்வாளர் விஜய்பாஸ்கரை ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார். சிறந்த காவல் அதிகாரி, கர்நாடாக சிங்கம் என பெயர் வாங்கிய அண்ணாமலை, அரசியலில் களமிறங்கியதும், காவல் ஆய்வாளரை ரவுடி அரசியல்வாதியை போல விரலை நீட்டி எச்சரித்தது காண்போரை முகம் சுழிக்கச் செய்தது.

இதையடுத்து தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் கேரளா அரசை கடுமையாகச் சாடினார். அணையை திறக்கும் போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் செல்வது கட்டாயம். ஆனால் தன்னிச்சையாக கேரளா தண்ணீரை திறந்தது எப்படி. அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் கேரள அரசிடம் மு.க.ஸ்டாலின் மண்டியிட்டுவிட்டார். இதற்காக தமிழ்நாடு மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை ஆவேசத்துடன் தெரிவித்தார். அதேபோல், விவசாயிகள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பேன் என்று கூறும் வைகோ, இதுவரை முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசாதது ஏன் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்கக்கோரியும், தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளை கண்டித்து பா.ஜ.க. நடத்திய போராட்டம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் செய்ததாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டர்கள் 850 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!