2015 சென்னை வெள்ளம் ஸ்பெஷலிஸ்ட்.. செங்கல்பட்டில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா களமிறக்கப்படுவது ஏன்.?

By Asianet TamilFirst Published Nov 9, 2021, 9:22 AM IST
Highlights

2015-இல் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர், மணிமங்கலம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல அதிரடி நடவடிக்கைகளை அமுதா மேற்கொண்டார். தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார். 

கடந்த 2015-ஆம் அண்டு வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றி கடும் நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் இரு தினங்களுக்கு முன்பு 25 செ.மீ. வரை மழை பெய்தது. இதனால்,  சென்னை நகரமே வெள்ளக் காடானது. இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் மழை பாதிப்பு, நிவாரணம், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளைக் கவனிக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு ஆகிய 4 பகுதிகளுக்கு தனியாக சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிரதமர் அலுவலகப் பணியிலிருந்து திரும்பிய அவருக்கு இரு தினங்களுக்கு முன்புதான் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் பணியைக் கவனிப்பதற்கு முன்பாகவே மழை, வெள்ளப் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம் ஆகிய பாதிப்புகளின்போது களமிறங்கி பணி செய்தவர் அமுதா. குறிப்பாக 2015 சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கியபோது, அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் சிறப்பு அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது. 

2015-இல் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர், மணிமங்கலம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல அதிரடி நடவடிக்கைகளை அமுதா மேற்கொண்டார். தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார். குறிப்பாக முடிச்சூர் அருகே நீர்வழிப்பாதையில் இருந்த கட்டிடங்களின் ஆக்கிரமிப்புகளை களத்தில் இறங்கி இடிக்க உத்தரவிட்டார்.  அந்த நேரத்தில் அமுதாவின் பணிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. தற்போது பணி ஒதுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் மேற்சொன்ன பகுதிகளும் வருகின்றன. மேலும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் வருகின்றன.

 சென்னையில் நாளையும் நாளை மறுதினமும் மீண்டும் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யலாம் என்ற சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், அதுபோன்றதொரு மழை பெய்தால் பெரும் பாதிப்பையும் விளைவையும் சென்னை மாநகரமும் புறநகர்ப் பகுதிகளும் சந்திக்க நேரிடும். இந்நிலையில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு, வெள்ளத்தில் அணுகும் அனுபவம் பெற்ற அமுதா கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல தென்சென்னைக்கு கோபால், வடசென்னைக்கு கார்த்திகேயன், மத்திய சென்னைக்கு பன்கஜ் குமார் பன்சல் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

click me!